கருப்பு கொடிகளுடன் வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கருப்பு கொடிகளுடன் வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

அறச்சலூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கருப்பு கொடிகளுடன் வந்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அறச்சலூர்,

ஈரோடு மாவட்டம் அறச்சலூர், தலவுமலை, வடபழனி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து அறச்சலூரில் மூடப்பட்ட கடைக்கு பதிலாக வேறு டாஸ்மாக் கடையை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக அறச்சலூர் அருகே உள்ள நாகமலை குமரன் கோவில் மலையின் அடிவாரத்தில் உள்ள நாகராஜபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டது.

இதையடுத்து நாகராஜபுரத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதைத்தொடர்ந்து அறச்சலூர் போலீசார் அங்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் பொதுமக்களிடம் ‘இதுகுறித்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளியுங்கள்’ என தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கருப்பு கொடிகளுடன் வந்து முற்றுகை

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கருப்பு கொடிகளுடன் நேற்று மதியம் 12 மணி அளவில் நாகராஜபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கடை முன்பு தரையில் உட்கார்ந்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோஷமிட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி தாசில்தார் மாசிலாமணி, அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை மூடுவதாக பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறினார்கள். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மதியம் 1 மணி அளவில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story