புதுவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வந்த விவசாயிகள் திடீர் சாலை மறியல்


புதுவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வந்த விவசாயிகள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 May 2017 3:08 AM IST (Updated: 12 May 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

புதுவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டுவந்த விளைபொருட்களுக்கு எடைபோடாததால் விவசாயிகள் திடீர் சாலைமறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு புதுவை மற்றும் சுற்று வட்டார தமிழக பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், மணிலா, உளுந்து உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

இதேபோல் நேற்றும் விவசாயிகள் தங்கள் வயலில் உற்பத்தி செய்த நெல், மணிலா உள்ளிட்ட விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர்.

சாலைமறியல்

ஆனால் அந்த விளைபொருட்களை வாகனங்களில் இருந்து இறக்கவும், பொருட் களை எடை போடவும் ஊழியர்கள் இல்லை. இதுதொடர்பாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

அப்போது அதிகாரிகள் நாளை பார்க்கலாம் என்று அலட்சியமாக கூறினார்களாம். இந்த சமயத்தில் மழை பெய்யும் விதமாக வானில் மேகங்கள் திரண்டு வந்தது. இதனால் தங்களின் விளைபொருட்கள் மழையில் நனைந்து நாசமாகிவிடும் என்று விவசாயிகள் கருதினர். இதையடுத்து விளைபொருட் களுக்கு எடை போட வலியுறுத்தி காமராஜ் சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து வந்து, விளை பொருட்களை எடைபோட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி கூறினர். அதன்பேரில் விவசாயிகள் தங்களது சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். 

Next Story