பிளஸ்–2 தேர்வு முடிவுகளை அறிய செல்போனுடன் காத்திருந்த மாணவர்கள்


பிளஸ்–2 தேர்வு முடிவுகளை அறிய செல்போனுடன் காத்திருந்த மாணவர்கள்
x
தினத்தந்தி 13 May 2017 4:15 AM IST (Updated: 12 May 2017 6:29 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்–2 தேர்வு முடிவு, மதிப்பெண்களை அறிய செல்போனுடன் மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வுகளுக்கான முடிவுகள் மே மாதம் 12–ந்தேதி வெளியிடப்படும் என்று தேர்வு நடந்த சமயத்திலேயே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில் திடீரென தமிழக அரசின் சார்பில் சி.பி.எஸ்.சி. கல்வி முறைப்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், இந்த ஆண்டு முதல் மாணவர்களின் மதிப்பெண்கள் ரேங்க் அடிப்படையில் வெளியிடப்படாது என்றும் அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும் என்றும், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறந்த மாணவர்கள் என்று சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

மேலும், இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு அவரவர்களின் செல்போன் எண்களுக்கு மதிப்பெண் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், இதுதவிர அந்தந்த பள்ளிகளுக்கு மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அரசின் இந்த புதிய அறிவிப்பின் காரணமாக நேற்று பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியானதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பள்ளிகளில் குவிந்த மாணவ–மாணவிகள் தங்களின் செல்போன்களையும், நண்பர்களின் செல்போன்களையும் ஆவலுடன் பார்த்தவாறே மதிப்பெண்களை அறிய எதிர்பார்த்து காத்திருந்தனர். மதிப்பெண்கள் வரப்பெற்றதும் தங்களின் மதிப்பெண்களை பார்த்த மாணவ–மாணவிகள் மற்றும் அவரவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அவர்களின் பெற்றோர் மகிழ்ச்சியில் கண்கலங்கி பாராட்டினர்.

ஆர்வம்

மேலும், பள்ளிகளில் ஒட்டப்பட்ட மதிப்பெண்களின் விவரங்களையும் மாணவ–மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு பார்த்து தங்களின் மதிப்பெண்களையும், தங்களின் நண்பர்கள் மதிப்பெண்களையும் பார்த்தனர். ஒருபுறம் செல்போனிலும், அந்தந்த பள்ளியிலும் மதிப்பெண்கள் அனுப்பப்பட்டாலும் இணையதளங்களில் தங்களின் மதிப்பெண்களை பார்க்கும் ஆவலுடன் ஏராளமான மாணவர்கள் இணையதள மையங்களை நாடிச்சென்றனர். இதனால் தேர்வு முடிவுகளை பார்ப்பதற்காக இன்டெர்நெட் மையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.


Next Story