சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 May 2017 4:15 AM IST (Updated: 12 May 2017 8:20 PM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

சேத்தியாத்தோப்பு,

தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி பல இடங்களில் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

இதற்கிடையில் ஏற்கனவே கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை மூடவும் கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சேத்தியாத்தோப்பு அருகே ஒரு கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பற்றிய விவரம் வருமாறு:–

குடிபிரியர்களால் தொல்லை

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சாத்தாங்குடி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு சாத்தாங்குடியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த குடிபிரியர்கள் வருகின்றனர். மதுபாட்டில்களை வாங்கி அங்கேயே அவர்கள் மது குடிக்கிறார்கள்.

போதை தலைக்கு ஏறியதும், அந்த வழியாக செல்லும் மாணவிகள், பெண்களை குடிபிரியர்கள் கேலி செய்தனர். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும், குடிபிரியர்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.

கிராம மக்கள் போராட்டம்

வழக்கம்போல் டாஸ்மாக் விற்பனையாளரும், மேற்பார்வையாளரும் கடையை திறப்பதற்காக நேற்று மதியம் சாத்தாங்குடி கிராமத்துக்கு வந்தனர். அவர்களை சாத்தாங்குடி கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் தாசில்தார் மகேஷ், சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும், நிரந்தரமாக அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நடவடிக்கை

அதற்கு அதிகாரிகள், தற்போது டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடுவதாகவும், இந்த கிராமத்தில் இருந்து நிரந்தரமாக டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story