திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல் கும்பலை சேர்ந்த 30 பேர் தப்பி ஓட்டம் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு
திருமலை சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்துதற்காக முகாமிட்டிருந்த 30 பேர் கும்பல்
திருமலை
திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்கள் அதிகம் உள்ளன. இந்த மரங்களை சிலர் வெட்டி கடத்தி வெளிநாட்டுக்கு விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். இதனை தடுக்க ஆந்திர வனத்துறை மற்றும் காவல் துறை சார்பில் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் கலக்கம்பாடி சாலை அருகே அரிதா காலனி வனப்பகுதிக்குள் செம்மரங்களை வெட்டுவதற்கு ஒரு கும்பல் முகாமிட்டிருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயநரசிமமா தலைமையில் அதிரடிப்படையினர் அந்த பகுதிக்கு விரைந்தனர்.
கல்வீசி தாக்க முயற்சிபோலீசாரை பார்த்ததும் அந்த கும்பலில் இருந்தவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை எச்சரிப்பதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே வனப்பகுதியிலிருந்து அந்த கும்பல் இருளில் தப்பி ஓடியது. போலீசாரும் அவர்களை விரட்டினர். ஆனால் அவர்கள் அனைவரும் மாயமாய் மறைந்து விட்டனர்.
அந்த கும்பல் வனப்பகுதியிலேயே முகாமிட்டு செம்மரங்களை வெட்டுவதற்கு திட்டமிட்டிருந்துள்ளது. இதற்காக ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள், அரிசி, காய்கறிகள், தண்ணீர் பாட்டில்கள், பாத்திரங்கள் மற்றும் செம்மரம் வெட்டுவதற்கு தேவையான கத்திகள், எந்திரங்களையும் கொண்டு வந்துள்ளனர். மேலும் மதுபாட்டில்களையும் அவர்கள் வைத்திருந்தனர். அதனை அப்படியே போட்டுவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர். இவற்றை போலீசார் கைப்பற்றினர்.
உயர் அதிகாரிகள் விரைவுஇது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ரவிசங்கர், துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். தப்பி ஓடியவர்களை வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தி பிடிக்க கூடுதல் போலீசார் மற்றும் வனத்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தப்பி ஓடிய அனைவரும் தமிழ்நாடு மாநிலம் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.