திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலத்தில் தடையை மீறி மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் கொளத்தூர் மணி உள்பட 85 பேர் கைது
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலத்தில் தடையை மீறி மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்
சேலம்,
கருத்துரிமை, உணவு உரிமைக்கு தடைபோடும் போலீசாரின் செயலை கண்டிப்பதாக கூறி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போராட்டத்திற்கு சேலம் மாநகர காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்தநிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாவட்ட செயலாளர் டேவிட் உள்பட ஏராளமானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர். பின்னர், அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை எதிர்க்கும் மத்திய அரசை கண்டித்தும், கருத்துரிமை, உணவு உரிமைக்கு தடைபோடுவதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சமைத்து எடுத்து வரப்பட்ட மாட்டுக்கறியையும், அதன் இறைச்சிகளையும் சாப்பிட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
85 பேர் கைதுஇதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தடையை மீறி மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்பட 85 பேரை கைது செய்தனர். இவர்களில் 5 பேர் பெண்களும், 3 பேர் குழந்தைகளும் அடங்குவர். பின்னர், அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, பழைய பஸ்நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த போராட்டம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி நிருபர்களிடம் கூறியதாவது:–
மாட்டுக்கறி பிரியாணி விற்பனைபால் கொடுக்கும், பாரம் இழுக்கும் மாடுகளையும், இளங்கன்றுகளையும் கொல்லக்கூடாது என்பதை ஒரு மாநில அரசு விரும்பினால் சட்டமாக்கிக் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் அவ்வாறான பசுவதை தடைச்சட்டம் எதுவும் இல்லை. தமிழகம் முழுவதும் மாட்டுக்கறி பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. அதை அரசு தடுக்காதது ஏன்?
இந்துக்களில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடும் நிலையில், பாரதீய ஜனதா கட்சி தேசிய செயாளர் எச்.ராஜா, அசைவம் சாப்பிடுவோர் இந்துக்கள் அல்ல, என்கிறார். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாட்டுக்கறி அரசியல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவற்கும், கருத்தரங்கின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கவும் முடிவு செய்திருந்தோம். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதை கண்டிக்கிற வகையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார். கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினரை மாலையில் போலீசார் விடுவித்தனர்.