திருப்புவனம் அருகே விபத்து: பஸ்–கார் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி
திருப்புவனம் அருகே நான்கு வழிச்சாலையில் பஸ்சும், காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் ராமேசுவரத்திற்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்தட 3 பேர் உள்பட 4 பேர் பலியாகினர்.
திருப்புவனம்,
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். அரசு ஊழியர். நேற்று இவர் தனது மனைவி பாக்கியலட்சுமி, மகன் முத்துராமு, உறவினர் ஜெயபார்த்த சாரதி ஆகியோருடன் காரில் ராமேசுவரத்திற்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து மாலை புறப்பட்டு, திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை விஜய் ஆனந்த் ஓட்டி சென்றதாக தெரிகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மாரநாடு பகுதியில் நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பஸ்சும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் கார் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டதுடன், காரின் முன்பக்க பகுதி நொறுங்கி போனது.
4 பேர் பலிஇந்த விபத்தில் காரில் இருந்த விஜய் ஆனந்த், மனைவி பாக்கியலட்சுமி, மகன் முத்துராமு ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஜெயபார்த்த சாரதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரும் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் இறந்துபோனார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.