அம்மாபேட்டை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
அம்மாபேட்டை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதுடன், கடைமுன் குழி தோண்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்மாபேட்டை,
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் ரோட்டில் பவானி, குட்டை முனியப்பன் கோவில், சித்தார், அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 5 டாஸ்மாக் கடைகள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் மூடப்பட்டன. இதில் பவானியில் உள்ள மேட்டூர் ரோட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு குடியிருப்பு பகுதியில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இதற்காக குதிரைக்கல்மேடு பகுதியில் உள்ள ஒரு கடையை டாஸ்மாக் நிர்வாகம் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் குதிரைக்கல்மேடுவுக்கு வந்து டாஸ்மாக் கடை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுபற்றி குதிரைக்கல்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் பார்வையிட்டு சென்ற கடைக்கு நேற்று காலை 10.15 மணி அளவில் வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குழி தோண்டி தர்ணா போராட்டம்பின்னர் அந்த கடை முன்பு பொதுமக்கள் குழி தோண்டினர். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடைக்கு செல்லும் ரோட்டின் குறுக்கே குழி தோண்டினர். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ–மாணவிகள் அதிக அளவில் உள்ளனர். எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் மாணவ–மாணவிகளுக்கு அது இடையூறாக அமையும். எனவே இங்கு கண்டிப்பாக டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது,’ என்று தெரிவித்தனர்.
பரபரப்புஇதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், ‘இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் 11.15 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதுடன், கடை முன்பு மற்றும் கடைக்கு செல்லும் ரோட்டின் குறுக்கே குழி தோண்டி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அம்மாபேட்டை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.