வேதாரண்யத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம், டாஸ்மாக்கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்றிய ஜவுளி கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
வேதாரண்யத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் டாஸ்மாக்கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்றிய ஜவுளி கடை
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் மன்சூர்(வயது40). இவர் அதே ஊரில் ஜவுளி கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் முகமதுயூசுப் (22). டிரைவர். இவர்கள் நேற்று மதியம் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளனர். இதற்கு அவர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறையை வாங்கி சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்து மற்றொரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். அப்போது அந்த நோட்டை வாங்கி பார்த்து போது கள்ளநோட்டு போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த பெட்ரோல் விற்பனை நிலைய காசாளர் டேனியல் பிரபாகரன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு, இன்ஸ்பெக்டர்கள் அருணாச்சலம், ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.
2 பேர் கைதுபின்னர் அவர்களிடம் இருந்த ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டையும், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டதற்காக கொடுத்த நோட்டு மற்றும் சில்லறை மாற்ற கொடுத்த நோட்டு என மொத்தம் மூன்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில் 3 நோட்டுகளும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து மன்சூர், முகமதுயூசுப் ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்கடையில் இரண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த டாஸ்மாக்கடைக்கு சென்று அவர்கள் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது அவையும் கள்ள நோட்டுகள் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன்சூர், முகமதுயூசுப் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களை வேதாரண்யம் கோர்ட்டில் அஜர்படுத்தினர்.