தேனி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 95.93 சதவீதம் பேர் தேர்ச்சி தமிழகத்தில் 9–வது இடம்
பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வில் 95.93 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று தேனி மாவட்டம் தமிழகத்தில் 9–வது இடத்தை பிடித்து உள்ளது.
தேனி,
பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை 7,284 மாணவர்கள், 7,634 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 918 எழுதி இருந்தனர்.
இதில், 6,920 மாணவர்கள், 7,391 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 311 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதம் ஆகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.81 சதவீதம் ஆகும். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 95.93 சதவீதம் ஆகும்.
9–வது இடம்கடந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வில் தேனி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 95.11 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு 0.82 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டு தமிழக அளவில் தேர்ச்சியில் தேனி மாவட்டம் 7–வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 9–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கல்வி மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டு உள்ளது.
கல்வி மாவட்டம்தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 7,011 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 6,704 மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.62 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.66 சதவீதமாக இருந்தது.
உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் இந்த ஆண்டு 7,907 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 7,607 மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.20 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.50 சதவீதமாக இருந்தது.