தொடர்மழை எதிரொலி: மூலவைகை ஆற்றில் நீர்வரத்து; விவசாயிகள் மகிழ்ச்சி


தொடர்மழை எதிரொலி: மூலவைகை ஆற்றில் நீர்வரத்து; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 May 2017 3:30 AM IST (Updated: 13 May 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழை எதிரொலியாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடமலைக்குண்டு

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150 கிராமங்களுக்கும் மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மூலவைகை ஆறு வறண்டு காணப்பட்டதால் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்தநிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை முதல் வருசநாடு கிராமத்தை கடந்து தண்ணீர் சென்றது. கடமலைக்குண்டு கிராமத்தில் இருந்து வாலிப்பாறை வரை மூலவைகை ஆற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் ஏராளமான விவசாயிகள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

மின் மோட்டார்கள்

அதேபோல ஆற்றுக்குள்ளே எந்திரங்கள் மூலம் பெரிய கிணறு அமைத்து அதிலிருந்து தோட்டங்களுக்கு தண்ணீர் எடுத்து செல்கின்றனர். மேலும் சில இடங்களில் ஆற்றுக்குள் கிணறு அமைத்து அதனை சுற்றிலும் கரை அமைத்து நீர்வரத்து ஏற்பட்டால் தண்ணீர் முழுவதும் கிணற்றுக்குள் செல்லுமாறு செய்துள்ளனர். இதன் காரணமாக கடந்த ஆண்டில் 4 முறை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டும் வருசநாடு கிராமத்தை தண்ணீர் கடந்து செல்லவில்லை.

எனவே கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி வருவாய்துறை, வனத்துறை அதிகாரிகள் வருசநாடு அருகே தும்மக்குண்டு கிராமத்தில் இருந்த மின்மோட்டார்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மூலவைகை ஆற்றில் நீர்வரத்து

இங்கு 6 மின்மோட்டார்களை அகற்றிய நிலையில் அந்த பகுதி விவசாயிகள், ஒரு நாள் அவகாசம் அளித்தால் மின்மோட்டார்களை தாங்களாகவே அகற்றிக்கொள்ளவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதன்படி மின்மோட்டார்களை அகற்றிக்கொள்ள ஒரு நாள் அவகாசம் அளித்துவிட்டு அதிகாரிகள் பணிகளை முடித்து திரும்பினர்.

ஆனால் வருசநாடு பகுதியில் பெரும்பாலானோர் மின்மோட்டார்களை அப்புறப்படுத்தாமல் உள்ளனர். மேலும் தற்போது மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் வருசநாடு பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடும்பாறை கிராமத்துக்கு தண்ணீர் வந்தடைந்தால் தான் மூலக்கடை, தங்கம்மாள்புரம், முத்தாலம்பாறை உள்ளிட்ட ஏராளமான ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை முழுமையாக நீங்கும்.

கோரிக்கை

தற்போது வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அடுத்த சில நாட்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆற்றங்கரை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.

அதேபோல நீர்வரத்து கடந்து செல்ல இடையூறாக உள்ள கிணறுகளையும் மூட வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story