மழை பெய்துள்ளதால் விவசாய பணிகள் தொடக்கம் விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை அரசு செய்யும் மந்திரி ஏ.மஞ்சு பேட்டி
மழை பெய்துள்ளதால் விவசாய பணிகள் தொடங்கி உள்ளன. விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை அரசு செய்யும் என்று மந்திரி ஏ.மஞ்சு தெரிவித்துள்ளார்.
ஹாசன்,
மழை பெய்துள்ளதால் விவசாய பணிகள் தொடங்கி உள்ளன. விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை அரசு செய்யும் என்று மந்திரி ஏ.மஞ்சு தெரிவித்துள்ளார்.
உருளை கிழங்கு விதை வழங்கும் நிகழ்ச்சிகர்நாடகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், ஹாசன் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மாநில அரசின் சார்பில் உருளை கிழங்கு விதை வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஹாசன் டவுனில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் நடந்தது.
இதில், மாவட்ட பொறுப்பு மந்திரியும், கால்நடை துறை மந்திரியுமான ஏ.மஞ்சு கலந்துகொண்டு விவசாயிகளுக்கு உருளை கிழங்கு விதைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கர்நாடக அரசு சார்பில்...கர்நாடகத்தில் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். ஹாசன் மாவட்ட விவசாயிகள் உருளை கிழங்கு பயிரிட முன்வந்துள்ளனர். இதனால் ஹாசன் மாவட்ட விவசாயிகளுக்கு கர்நாடக அரசு சார்பில் உருளை கிழங்கு விதைகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு உருளை கிழங்கு விதை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதாவது, கடந்த ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,950–க்கு உருளை கிழங்கு விதை வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,100–க்கு வழங்கப்படுகிறது. ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் விவசாயிகள் உருளை கிழங்கு விதைகளை வாங்கிக் கொள்ளலாம்.
விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பேன்நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். இதனால் எனக்கு விவசாயிகளின் கஷ்டங்கள் பற்றி நன்கு தெரியும். நான் எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பேன். மாநில அரசும் விவசாயிகளின் பக்கம் தான் உள்ளது. விவசாயிகளுக்காக மானிய விலையில் பூச்சிக் கொல்லி மருந்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை அரசு செய்யும். விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.