தாடிக்கொம்பு அருகே மதுக்கடையை சூறையாடிய பொதுமக்கள் மதுபாட்டில்களை உடைத்ததால் பரபரப்பு


தாடிக்கொம்பு அருகே மதுக்கடையை சூறையாடிய பொதுமக்கள் மதுபாட்டில்களை உடைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 May 2017 4:15 AM IST (Updated: 13 May 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

தாடிக்கொம்பு அருகே, மதுக்கடையை சூறையாடிய பொதுமக்கள் மதுபாட்டில்களை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தாடிக்கொம்பு,

திண்டுக்கல்–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அகரம்பிரிவு அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து அந்த மதுக்கடை மூடப்பட்டது. பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உப்பாத்து ஓடை என்ற இடத்தில் தனியார் தோட்டத்தில் மதுக்கடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உப்பாத்து ஓடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அந்த கடை முன்பு திரண்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் கடைக்குள் கற்களை வீசி எறிந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் கடையைவிட்டு வெளியேறினர்.

பாட்டில்கள் உடைப்பு

இதையடுத்து கடைக்குள் சென்ற பெண்கள், மதுபான பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை எடுத்து கடைக்கு வெளியே கொண்டுவந்து வீசினர். அதனை கடை முன்பு திரண்டிருந்த பொதுமக்கள் கம்பால் அடித்து உடைத்தனர். இதற்கிடையே மதுக்கடை சூறையாடப்படுவது குறித்து திண்டுக்கல் புறநகர் போலீசாருக்கு கடை ஊழியர்கள் தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், தாலுகா இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் அதிவிரைவு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் மதுபாட்டில்களை உடைத்துவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றுவிட்டனர். ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொதுமக்கள் சேதப்படுத்தியதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதே போல் திண்டுக்கல் அருகே மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் விவரம் வருமாறு:–

திண்டுக்கல்–சேலம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த மதுக்கடை நீதிமன்ற உத்தரவையடுத்து மூடப்பட்டது. பின்னர் அந்த கடையை திண்டுக்கல் அருகே உள்ள செங்குளத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அதற்கான கட்டிடம் அமைக்கும் பணிகளும் தொடங்கின. இதையறிந்த செங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திண்டுக்கல்–சேலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது மதுக்கடை அமைய உள்ள இடத்தின் அருகில் தான் பள்ளி, கல்லூரிகள் செயல்படுகின்றன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். மேலும் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. எனவே அந்த இடத்தில் மதுக்கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story