தமிழக கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோவிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி
தேனி மாவட்டம், கூடலூர் அருகே பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்து உள்ளது. இது தமிழக–கேரள எல்லைப் பகுதியாகும். இந்த கோவிலில் கடந்த 10–ந்தேதி சித்ரா பவுர்ணமி திருவிழா நடத்தப்பட்டது. இந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளின் போது, கோவில் வளாகத்தில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டன.
அப்போது, வடகிழக்கு பகுதியில் கிழக்கு நோக்கிய சன்னிதானம் எதிரே மதில்சுவரின் அடிப்பகுதியில் ஒரு கல்வெட்டு இருப்பதை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், தாசில்தார் குமார் ஆகியோர் கண்டறிந்தனர். இதுகுறித்து இருமாநில அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் கண்ணகி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பாண்டியர் காலம்அப்போது அது பாண்டியர் கால கல்வெட்டு என்று தெரிவித்தனர். ஏற்கனவே கோவிலில் 8 கல்வெட்டுகள் உள்ள நிலையில், இது 9–வது கல்வெட்டு என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கண்டறியப்பட்டதில் கோவிலுக்குள் 2 கல்வெட்டுகளும், மதில் சுவரில் 6 கல்வெட்டுகளும் உள்ளன. தற்போது மதில் சுவர் கல்வெட்டுகள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.
ஏற்கனவே கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் 6 கல்வெட்டுகள் பாண்டியர் காலத்தையும், 2 சோழர் காலத்தையும் சேர்ந்தது. தற்போது மேலும் ஒரு பாண்டியர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டு உள்ளது.
கடந்த 1966–ம் ஆண்டு கால கட்டத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் பாண்டியர் கால கல்வெட்டு ஒன்றில், ‘ஸ்ரீபூரணகிரி ஆளுடை நாச்சியார்’ என்று கண்ணகியை குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று தற்போது கண்டறியப்பட்ட கல்வெட்டில் ‘ஆளுடைய நாச்சியார்’ என்ற வார்த்தையும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே இவை இரண்டும் சமகால கல்வெட்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் இந்த கல்வெட்டு முழுமையற்றதாக உள்ளது. மேலும் இதன் தொடர்ச்சி அடுத்த கற்களில் இருக்க வாய்ப்பு உள்ளது.
முழுமையில்லைகண்ணகி கோட்டத்தின் மதில் சுவர் சுமார் 12 அடி உயரம் கொண்டது. தற்போது 3 அடி உயரமே உள்ளது. காலம் காலமாக மண் படிந்ததால் தரைத்தளம் உயர்ந்து, மதில் சுவர் உயரம் குறைந்துள்ளது. எனவே, தரைத்தளத்தில் தேங்கியுள்ள மண்ணை அப்புறப்படுத்தினால், மேலும் பல கல்வெட்டுகள் கண்டறியப்பட வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், தற்போது கண்டறியப்பட்ட கல்வெட்டின் தொடர்ச்சியையும் கண்டுபிடித்து, கண்ணகி கோவில் வரலாற்றில் மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
எனவே கண்ணகி கோட்டத்தில் சிதிலம் அடைந்து வரும் கல்வெட்டுகளை பாதுகாக்கவும், அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.