மாநிலம் முழுவதும் 25–ந் தேதி முதல் பா.ஜனதா சார்பில் விவசாயிகளை சந்திக்க யாத்திரை ராவ்சாகேப் தன்வே பேட்டி
மராட்டியத்தில் வருகிற 25–ந் தேதி முதல் ‘சன்வத் யாத்திரை’ என்ற பெயரில் விவசாயிகளை சந்திக்க இருப்பதாக பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.
மும்பை,
மராட்டியத்தில் வருகிற 25–ந் தேதி முதல் ‘சன்வத் யாத்திரை’ என்ற பெயரில் விவசாயிகளை சந்திக்க இருப்பதாக பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் பேரணிபயிர்க்கடன் தள்ளுபடியை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் சமீபத்தில் ‘சங்கர்ஷ் யாத்திரை’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
இதனை விமர்சித்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ‘‘பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதால், எதிர்க்கட்சிகளின் பேரணிக்கு சாதகமான பதில் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாரதீய ஜனதா சார்பில் மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
இந்த நிலையில், ‘சன்வத் யாத்திரை’ என்ற பெயரில் வருகிற 25–ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் பா.ஜனதா சார்பில் பேரணி தொடங்க இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே நேற்று மும்பையில் அறிவித்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
அடுத்த தேர்தல் எளிமையாகும்முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசும், நானும் இரண்டு வேறுபட்ட இடங்களில் இருந்து இந்த யாத்திரையை தொடங்கி வைப்போம். அப்போது தான் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை எங்களால் நெருங்க முடியும். விவசாயிகளை அவர்களது விவசாய நிலங்களில் சந்தித்து பேசுவோம். விவசாயிகளுக்கான நல திட்டங்கள் மீதான அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சிப்போம்.
பா.ஜனதாவை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அந்தந்த பகுதிகளில், இந்த சன்வத் யாத்திரையில் பங்கேற்க வேண்டும். இன்று நாம் கடுமையாக உழைத்து பொதுமக்களுடன் நல்ல தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் தான், அடுத்த தேர்தல்களில் எளிதாக இருக்கும்.
இவ்வாறு ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.