லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட திருச்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிறையில் அடைப்பு


லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட திருச்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 13 May 2017 3:33 AM IST (Updated: 13 May 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட திருச்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிறையில் அடைப்பு ‘பணியிடை நீக்கம்’ செய்யவும் நடவடிக்கை

திருச்சி

திருச்சி பொதுப்பணித்துறை (கட்டிட பிரிவு) செயற்பொறியாளர் கருணாகரன், ஒப்பந்ததாரர் செல்வகுமார் என்பவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் கோர்ட்டு உத்தரவு படி கருணாகரன் நேற்று முன்தினம் இரவோடு இரவாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கருணாகரன் பொதுப்பணித்துறையில் மாவட்ட அளவிலான அதிகாரி என்பதால் அவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டது பற்றிய தகவலை திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

 இதன் அடிப்படையில் கருணாகரனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்வதற்கு துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கருணாகரன் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவருடைய மனைவி திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியை ஆக பணியாற்றி வருகிறார். பொதுப்பணித்துறையில் உதவி நிர்வாக பொறியாளராக பணியாற்றி வந்த கருணாகரன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் செயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.

 இந்த நிலையில் தான் அவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story