பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: கலைக்கல்லூரிகளில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க மாணவ மாணவிகள் குவிந்தனர்


பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: கலைக்கல்லூரிகளில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க மாணவ மாணவிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 13 May 2017 3:45 AM IST (Updated: 13 May 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து திருச்சியில் உள்ள கலைக்கல்லூரிகளில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க மாணவ–மாணவிகள் குவிந்தனர்.

திருச்சி

பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு ‘ரேங்க்’ முறை பின்பற்றப்படாமல் ‘கிரேடு’ முறையில் மதிப்பெண்கள் வரிசை பட்டியல் வெளியிடப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வில் 95.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில் பலர் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு செல்ல தொடங்கினர்.

திருச்சியில் பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மாணவ–மாணவிகள் நேற்று குவிந்தனர். அவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். மாணவ–மாணவிகள் விண்ணப்ப படிவத்தை வாங்கி அங்கேயே பூர்த்தி செய்து கொடுத்தனர். பி.காம், பி.எஸ்.சி., பி.ஏ. போன்ற பாடப்பிரிவுகளுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை காணமுடிந்தது.

மாணவிகள் ஆர்வம்

திருச்சியில் ஒரு தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர். கலை மற்றும் அறிவியல் துறை பட்டப்படிப்பில் சேர இந்த ஆண்டு மாணவ–மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டி உள்ளனர்.

மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற துறைகளை சேர்ந்து படிக்க ஆர்வம் இல்லாதவர்கள் மற்றும் பிளஸ்–2 தேர்வில் தாங்கள் எடுத்த மதிப்பெண்ணிற்கு மருத்துவம், என்ஜினீயரிங் படிக்க இடம் கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற நிலையில் உள்ளவர்கள் கலை மற்றும் அறிவியல் துறை பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்க தொடங்கி உள்ளனர். இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் கூட்டம் அலைமோதுகிறது.


Next Story