கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க அரசின் ஆதரவு தேவை நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள்


கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க அரசின் ஆதரவு தேவை நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 May 2017 3:54 AM IST (Updated: 13 May 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

‘‘கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க அரசின் ஆதரவு தேவை’’ என்று இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

மும்பை,

‘‘கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க அரசின் ஆதரவு தேவை’’ என்று இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சன்

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கல்லீரல் அழற்சி நோய் (ஹெபடைடிஸ்) விழிப்புணர்வு பிரசார நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதையொட்டி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 74 வயது நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு பேசியதாவது:–

கல்லீரல் அழற்சி நோய் பிரசார தூதராக என்னை நியமித்ததை அறிந்ததும், சுகாதாரத்துறை மந்திரியை நாங்கள் சந்திக்க சென்றோம். அப்போது, கல்லீரல் அழற்சியை ஒழிக்க நாம் தனிப்பட்ட முறையில் எவ்வளவு உழைக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, இதற்கு அரசு ஆதரவு தேவை. இல்லை என்றால், அதில் இருந்து விடுபட முடியாது என்று அவரிடம் கூறினோம்.

மகிழ்ச்சி அளிக்கிறது

அரசு அதன் சுகாதார திட்டங்கள் வாயிலாக கல்லீரல் அழற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கல்லீரல் அழற்சிக்கு பிரத்யேக கவனம் கொடுத்தால், முடிவை சாதித்துவிடலாம். இதற்காக நாங்கள் கடுமையாக முயற்சி எடுத்து வருகிறோம். கல்லீரல் அழற்சியை ஒழிக்க சில திட்டங்கள் இருந்தாலும், அதற்கென அர்ப்பணிக்கப்பட்ட பிரத்யேக திட்டங்கள் வகுக்கப்பட்டால் நல்லது.

கல்லீரல் அழற்சி விழிப்புணர்வு பிரசார தூதராக என்னை நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்லீரல் அழற்சி நோயால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடம் தெரியப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு அதன் வலி மற்றும் பாதிப்புகள் தெரியும்.

கல்லீரல் அழற்சி பற்றிய விழிப்புணர்வை நாட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்குகளிலும் கொண்டு செல்வோம். துரதிருஷ்டவசமாக, என்னால் அனைத்து இடங்களுக்கும் சென்று அனைத்து குடும்பத்தினரையும் சந்திக்க இயலாது.

நுரையீரல் பிரச்சினை

கள அளவில் செயல்படும் தன்னார்வ தொண்டர்கள் என் சார்பாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இந்த நற்பணிக்காக தங்களை அர்ப்பணிக்கும் அனைத்து நபர்களையும் எங்களுடன் அழைத்து செல்வோம்.

பொதுவாக, மது குடிப்பவர்களுக்கு தான் இதுபோன்ற வியாதி வரும் என்றும், கல்லீரல் பிரச்சினையை பற்றி கேட்டாலே ‘ஓ, அவர் குடிகாரராக இருப்பாரோ’ என்று பொதுமக்கள் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனவே, கல்லீரல் அழற்சி என்று கேட்டாலே மக்கள் பயப்படுகிறார்கள். இதுபற்றியும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்தார்.

4 லட்சத்து 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர்

முன்னதாக, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூனம் கேத்ராபால் சிங் கூறுகையில், ‘‘கல்லீரல் அழற்சி நோயால் இந்தியா உள்பட தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஆண்டுதோறும் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிர் இழக்கின்றனர். இந்த நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொற்று நோயை பரவவிடாமல் தடுக்க நடிகர் அமிதாப் பச்சன் பெரும் பங்கு வகிப்பார்’’ என்றார்.


Next Story