கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தகராறு மனைவியின் ஆண் நண்பரை அடித்து கொன்றவர் கைது


கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தகராறு மனைவியின் ஆண் நண்பரை அடித்து கொன்றவர் கைது
x
தினத்தந்தி 13 May 2017 4:04 AM IST (Updated: 13 May 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சண்டையிட்டு அவரது ஆண் நண்பரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சண்டையிட்டு அவரது ஆண் நண்பரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவி மீது சந்தேகம்

மும்பை டிராம்பேவை சேர்ந்தவர் லூயிஸ் பெராவ் (வயது48). இவரது மனைவி ஆர்த்தி. இவர் கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது ஆண் நண்பர் நீரஜ் திவாரி(32).

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் லூயிஸ் பெராவுக்கு சந்தேகம் உண்டானது. நீரஜ் திவாரியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கருதினார். எனவே அவர் மனைவியை கண்டித்தார்.

நீரஜ் திவாரியை சந்திப்பதை நிறுத்தும்படி கூறினார். ஆனால் ஆர்த்தி கேட்கவில்லை என்று தெரிகிறது. சம்பவத்தன்று ஆர்த்தி வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்தார்.

கிரிக்கெட் மட்டையால் தாக்கினார்

நீரஜ் திவாரியுடன் ஊர் சுற்றிவிட்டு வருவதாக சந்தேகப்பட்ட லூயிஸ் பெராவ் அவருடன் சண்டையிட்டார். ஆர்த்தி தான் வேலை பார்க்கும் கேட்டரிங் நிறுவனத்திற்கு சென்று வருவதாக கூறினார். ஆனால் லூயிஸ் பெராவ் அதை கேட்கவில்லை.

இதையடுத்து கணவருக்கு புரிய வைப்பதற்காக அவர் நீரஜ் திவாரியை வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதன்பேரில் அவரும் வீட்டிற்கு வந்தார். அப்போது இருவரது நடத்தை பற்றியும் இழிவாக பேசி லூயிஸ் பெராவ் சண்டையிட்டார்.

அப்போது அவருக்கும், நீரஜ் திவாரிக்கும் இடையே பயங்கர சண்டை உண்டானது. இதில் கடும் கோபம் அடைந்த லூயிஸ் பெராவ் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் நீரஜ் திவாரியை சரமாரியாக தலையில் தாக்கினார்.

கைது

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிச்சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி அவரை மீட்டு சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு 2 நாட்கள் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நீரஜ் திவாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் டிராம்பே போலீசார் லூயிஸ் பெராவ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Next Story