தஞ்சை, பட்டுக்கோட்டையில் ஆய்வு 10 பள்ளி வாகனங்களுக்கு தரச்சான்று ரத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
தஞ்சை, பட்டுக்கோட்டையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 10 வாகனங்களுக்கு தரச்சான்று ரத்து செய்து வட்டார
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் வட்ட அளவில் குழுக்களை அமைத்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுரைப்படி பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்திடவும், டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை மேம்படுத்திடவும் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி நேற்று தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 50 பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 307 வாகனங்களில் 278 வாகனங்கள் மட்டுமே ஆய்வுக்கு வந்திருந்தன. மீதமுள்ள 29 வாகனங்கள் வரவில்லை. இந்த ஆய்வு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. ஆய்வின்போது வாகனங்களுக்கு பதிவுசான்று, அனுமதிசீட்டு முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா? என ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு வாகனமாக ஏறி சென்று படிக்கட்டு நன்றாக இருக்கிறதா? சீட்டுகள், அவசரகால வழி, தீ தடுப்பு சாதனங்கள், முதலுதவி பெட்டிகள் முறையாக இருக்கிறதா? என்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பட்டுக்கோட்டைஇதேபோல் பட்டுக்கோட்டை பகுதி அலுவலக எல்லைக்குட்பட்ட 34 பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 280 வாகனங்களில் 170 வாகனங்கள் மட்டுமே ஆய்வுக்கு வந்திருந்தன. மீதமுள்ள 110 வாகனங்கள் வரவில்லை.
10 பள்ளி வாகனங்களுக்கு தரச்சான்று ரத்துஇது குறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:–
தஞ்சை, பட்டுக்கோட்டையில் மொத்தம் 84 பள்ளிகளை சேர்ந்த 587 வாகனங்கள் ஆய்வுக்கு வரும்படி அந்தந்த பள்ளிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 139 வாகனங்கள் ஆய்வுக்கு வரவில்லை. மீதமுள்ள வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவசரகால வழி கதவு முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், முதலுதவி பெட்டி இல்லை, சீட்டு முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் 10 வாகனங்களுக்கு தரச்சான்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் குறைகளை எல்லாம் சரி செய்து 31–ந்தேதி மீண்டும் ஆய்வுக்கு வாகனங்களை கொண்டு வந்தால் அனுமதி வழங்கப்படும். மேலும் ஆய்வில் கலந்து கொள்ளாத வாகனங்கள் பராமரிப்பு பணிக்காக ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வரவில்லை. அவர்கள் முறையாக பராமரிப்பு செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்படும். மேலும் சீட் பெல்ட் உள்பட சிறிய குறைபாடுகள் உள்ள வாகனங்களுக்கு அவற்றை சரி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், வட்டார போக்குவரத்து அதிகாரி முக்கண்ணன், ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மணிமேகலா, மாவட்ட கல்வி அதிகாரிகள் விமலா, அண்ணாப்பிள்ளை, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக பள்ளி வாகனங்களில் டிரைவர்களுக்கு கண்பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.