பெண்ணிடம் பணம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு
ஒரத்தநாடு தாலுகா ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவருடைய
தஞ்சாவூர்,
ஒரத்தநாடு தாலுகா ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவர் பழுதான தனது செல்போனை சரிசெய்ய தஞ்சை மகர்நோம்புச்சாவடியில் செல்போன் கடை நடத்திவந்த முபாரக்அலி (வயது 43) என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தனது செல்போன் கடையை விரிவு படுத்தப்போவதாகவும், புதிய கடை ஒன்றை விலைக்கு வாங்க இருப்பதாகவும் கூறி பாப்பாத்தியிடம் முபாரக்அலி பல முறை பணம் பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது, கொலை செய்துவிடுவதாகவும் பாப்பாத்தியை, முபாரக்அலி மிரட்டியுள்ளார்.
மேலும், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாப்பாத்தியை முபாரக்அலி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்துவந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முபாரக்அலிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், அபராதத்தொகையில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பாப்பாத்திக்கு இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கண்ணகி கார்த்திகேயன் ஆஜரானார்.