சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் கபடி போட்டி நடத்த போலீசார் அனுமதி அளிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் கபடி போட்டி நடத்த போலீசார் அனுமதி
மதுரை,
விருதுநகரைச் சேர்ந்த கவாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் ஊரில் கபடி போட்டி நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதேபோல நெல்லையை சேர்ந்த மாடசாமி, சிவகங்கையை சேர்ந்த சிகப்புராஜா உள்பட சிலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.ராஜா, பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
கபடி போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்களை இந்த கோர்ட்டு வழங்கி உள்ளது. ஆனாலும் பல இடங்களில் கபடி போட்டிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து வருகின்றனர். இதை ஊக்கப்படுத்த முடியாது. கபடி போட்டியானது, நமது பாரம்பரிய, பழமையான விளையாட்டு ஆகும்.
பல்வேறு நாடுகள் பேட்மிட்டன், கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டு வீரர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு ஒதுக்கீடு செய்து கொடுத்து ஊக்கப்படுத்துகின்றன.
அனுமதிக்க வேண்டும்அவர்கள் சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் ஏராளமான சாதனைகளை படைக்க வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நமது பாரம்பரிய விளையாட்டான கபடி ஆடும் வீரர்களை இங்குள்ளவர்கள் ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக தன்னம்பிக்கை இழக்க செய்கிறார்கள்.
கபடி போன்ற விளையாட்டுகள் கிராமங்களில் சாதி, மத பேதங்களை மறந்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்த வழிவகை செய்கின்றன. எனவே கபடி போட்டி நடத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, போலீசார் அனுமதிக்க வேண்டும்.
மனுதாரர்கள் குறிப்பிட்ட நேரத்திலும், சாதி, மத, அரசியல் உணர்வை தூண்டாத வகையிலும், விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படாத வகையிலும் கபடி விளையாட்டை நடத்த வேண்டும். மீறினால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த உத்தரவை அனைத்து மாவட்ட போலீசாருக்கும், டி.ஜி.பி. சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.