நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவற விட்ட நகை–மடிக்கணினியை மீட்டு இளம்பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவற விட்ட நகை, மடிக்கணினியை போலீசார் மீட்டு இளம்பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை,
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். இவருடைய மகள் உமா மகேசுவரி (வயது 22). இவருடைய தோழியின் திருமணம் நெல்லையில் நேற்று நடந்தது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக உமா மகேசுவரி நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு நெல்லை வந்தார்.
நேற்று காலை நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்து அடைந்தது.
குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த அவர், இறங்கி செல்லும் போது பையை ரெயிலில் போட்டு விட்டு சென்று விட்டார். ரெயில் நிறுத்தப்பட்ட சிறிது நேரத்தில் நெல்லை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்–இன்ஸ்பெக்டர் பத்மேக்கர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினார்கள்.
நகை–மடிக்கணினிஅப்போது பெட்டியில் தனியாக கிடந்த பையை எடுத்து பார்த்தனர். அதில் ஒரு மடிக்கணினி மற்றும் 5 பவுன் தங்க வளையல், கம்மல் ஆகியவை இருந்தன. இதையடுத்து அதனை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதிலிருந்த முகவரி மற்றும் செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். இதற்கிடையே பையை தவறவிட்ட உமா மகேசுவரி திரும்பி வந்து போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறினார்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், உமா மகேசுவரிடம் விசாரணை நடத்தி மடிக்கணினி மற்றும் நகைகளை ஒப்படைத்தனர். அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்து, பொருட்களை வாங்கிச்சென்றார்.