மாடுகளை கடத்தியதால் பறிமுதல் செய்யப்பட்டது போலீஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்த சொகுசு வேனுக்கு தீவைப்பு


மாடுகளை கடத்தியதால் பறிமுதல் செய்யப்பட்டது போலீஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்த சொகுசு வேனுக்கு தீவைப்பு
x
தினத்தந்தி 14 May 2017 2:45 AM IST (Updated: 14 May 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாடுகளை கடத்தியதால் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்த சொகுசு வேனுக்கு மர்மநபர் தீவைத்தார்.

குடகு,

மாடுகளை கடத்தியதால் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்த சொகுசு வேனுக்கு மர்மநபர் தீவைத்தார். இதில் அந்த வேன் முழுவதும் எரிந்து நாசமானது. இதில் தொடர்புடைய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மாடுகளை கடத்தியதால் சொகுசு வேன் பறிமுதல்

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால் நகர் அருகே கொட்லுபேட்டை பகுதியில் சனிவாரசந்தை போலீசார் சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு வேனை போலீசார் நிறுத்தும் படி கையசைத்தனர். ஆனால் வேனை நிறுத்தாமல் அதன் டிரைவர் ஓட்டிச் சென்றார்.

இதைதொடர்ந்து போலீசாரும் தங்களது வாகனத்தில் அந்த சொகுசு வேனை துரத்திச் சென்றனர். இதற்கிடையே சொகுசு வேன் அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதற்கிடையே சொகுசு வேனை குடகு–மங்களூரு எல்லையில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். வேனில் இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கைதானவர்கள் மங்களூருவை சேர்ந்த ஷெரீப், மன்சூர் ஆகியோர் என்பதும், இவர்கள் சோமவார்பேட்டையில் இருந்து மங்களூருவுக்கு மாடுகளை இறைச்சிக்காக கடத்தியதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து சொகுசு வேனில் கடத்தப்பட்ட 8 பசுமாடுகளையும் போலீசார் மீட்டனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தீவைப்பு

பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு வேனை போலீசார் பறிமுதல் செய்து, சனிவாரசந்தை போலீஸ் நிலையத்தில் நிறுத்திவைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை மர்மநபர் ஒருவர், அந்த சொகுசு வேனுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, சொகுசு வேனில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் தீவிபத்தில் சொகுசு வேன் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.

பரபரப்பு

மாடு கடத்தல் வழக்கில் தொடர்புடைய கைதானவர்களின் கூட்டாளிகளே சொகுசு வேனுக்கு தீவைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி சனிவாரசந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். போலீஸ் நிலையத்தில் நிறுத்தியிருந்த சொகுசு வேன் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story