பசவகல்யாண் டவுனில் கார்–லாரி மோதல்: ஒரே குடும்பத்தினர் 5 பேர் உடல் நசுங்கி சாவு
பசவகல்யாண் டவுனில் கார், லாரி மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் உடல் நசுங்கி செத்தனர்.
உப்பள்ளி,
பசவகல்யாண் டவுனில் கார், லாரி மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் உடல் நசுங்கி செத்தனர். இவர்கள் உறவினர் திருமணத்துக்கு சென்ற போது இந்த சோகம் நடந்து உள்ளது.
5 பேர் உடல் நசுங்கி சாவுகர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவகல்யாண் டவுனில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த சாலையில் எதிரே வந்து கொண்டு இருந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் லாரி மோதிய வேகத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி, காரில் பயணம் செய்த சிறுவன் உள்பட 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
திருமண விழாவில் கலந்துகொள்ள...இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பசவகல்யாண் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான சிறுவன் உள்பட 5 பேரின் உடல்களையும் மீட்டு விசாரித்தனர். விசாரணையில் பலியானவர்கள் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த ஆரத்தி சவுலா (வயது 45), மயூர் சவுலா(32), தயானந்த் சவுலா(4), ஜீவன்(34), சுனில்(48), என்பதும், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்ள காரில் வந்ததும், அப்போது கார் விபத்தில் சிக்கி 5 பேரும் பலியானதும் தெரியவந்தது.
இதனையடுத்து விபத்தில் பலியான 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பசவகல்யாண் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முன்னதாக விபத்து நடந்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து நடந்த இடம் மும்பை– ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலை என்பதால் அந்தப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்தனர்.
சோகம்இந்த சம்பவம் குறித்து பசவகல்யாண் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகிறார்கள். கார்– லாரி மோதிக் கொண்ட விபத்தில் சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.