அடங்காமல் சுற்றித்திரிந்த காட்டுயானை சாதுவாக மாறியது, சுற்றுலா பயணிகள் சவாரிக்காக தயாராகிறது


அடங்காமல் சுற்றித்திரிந்த காட்டுயானை சாதுவாக மாறியது, சுற்றுலா பயணிகள் சவாரிக்காக தயாராகிறது
x
தினத்தந்தி 14 May 2017 3:15 AM IST (Updated: 14 May 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

அடங்காமல் திரிந்த காட்டுயானை பயிற்சிக்கு பிறகு சாதுவாக மாறியது. சுற்றுலா பயணிகளின் சவாரிக்காக தயாராகி வருகிறது.

மசினகுடி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில் கடந்த ஆண்டு 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை பொதுமக்களை கண்டால் விடுவதில்லை. உடனே விரட்ட தொடங்கும். சில நேரங்களில் பொதுமக்களை தாக்கியும் வந்தது. இதில் சிலர் இறந்தும் உள்ளனர். அந்த யானை, கூட்டு சேர்ந்து வரும்போதும், தனியாக வரும்போதும் அடையாளம் தெரியக்கூடிய அளவில் பிரபலமானது. இதனால் அந்த யானையை சொன்னாலே பந்தலூர் பகுதியில் அச்சம் நிலவியது. அந்த அளவுக்கு அந்த யானை அடங்காமல் சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் அதனை ஆட்கொல்லி யானை என்று அழைக்க தொடங்கினர்.

பயிற்சி

இந்த நிலையில் அந்த யானையை பிடித்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து அந்த யானையை வனத்துறையினர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்றனர். அந்த யானை தெப்பக்காட்டில் உள்ள ஒரு இடத்தில் தனியாக அடைத்து வைக்கப்பட்டது. இரண்டு பாகன்கள் மூலம் அதற்கு கடுமையாக பயிற்சி அளிக்கப்பட்டது.

கட்டுப்பாட்டில் வந்தது

6 மாதகால பயிற்சிக்கு பிறகு அந்த யானை பாகன்களின் முழு கட்டுபாட்டில் வந்தது. பாகன்களின் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்பட்ட அந்த யானை அங்கிருந்து வெளியில் அழைத்து வரப்பட்டு மற்ற வளர்ப்பு யானைகளை போல பராமரிக்கபட்டு வந்தது. பாகன்களின் கட்டளைக்கு ஏற்ப அந்த யானை செயல்பட தொடங்கியதால் அந்த யானைக்கு கும்கி யானைகளுக்கான பயிற்சி அளிக்க முடிவு செய்யபட்டது. இதனையடுத்து அந்த யானைக்கு கடந்த சில மாதங்களாக மரக்கட்டைகளை தூக்குவது, ரோந்து செல்வது, சவாரி செல்வது போன்ற பயிற்சிகள் அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து பாகன்கள் கூறிய தாவது:-

சவாரிக்கு பயிற்சி

பயிற்சிக்கு பிறகு இந்த காட்டுயானையின் சுபாவம் முழுமையாக மாறி சாதுவாக மாறிவிட்டது. மற்ற யானைகளை காட்டிலும் சொன்னபடி கேட்டு வேலையை செய்கிறது. தற்போது அந்த யானை, சுற்றுலா பயணிகளின் சவாரிக்காக பழக்கப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக அந்த யானை சவாரியின் போது சுற்றுலா பயணிகள் அமர்ந்து செல்ல பயன்படுத்தும் அம்பாரியை கட்டி பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. இதனை அந்த யானை சிறப்பாக செய்து வருகிறது. இதுதவிர இன்னும் ஒருசில பயிற்சிகள் அந்த யானைக்கு அளிக்கப்பட உள்ளது. அனைத்து பயிற்சிகளும் முடிந்தவுடன் அந்த யானை சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய பயன்படுத்தபட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story