சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி மலரும் எடியூரப்பா பேட்டி
சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும், கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி மலரும் என்றும் எடியூரப்பா கூறினார்.
மங்களூரு,
சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும், கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி மலரும் என்றும் எடியூரப்பா கூறினார்.
எடியூரப்பா பேட்டிமங்களூரு பஜ்பே விமான நிலையத்தில் நேற்று முன்னாள் முதல்–மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மாநில தலைவருமான எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி, அரசின் சாதனை விளக்க மாநாடு நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த 4 வருடத்தில் அவர்கள் செய்த சாதனை என்னவென்றால், ஊழல் செய்தது அவர்களின் முதல் சாதனை. சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து போனது 2–வது சாதனை. மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கியும் அதனை பயன்படுத்தி கொள்ளாமல் கடனாளியாக ஆனது 3–வது சாதனை. மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றியது 4–வது சாதனை. இப்படி மிகப்பெரிய சாதனைகளை எல்லாம் காங்கிரஸ் கட்சியால் மட்டும் தான் செய்ய முடியும்.
பா.ஜனதா ஆட்சி மலரும்முன்னாள் எம்.பி. விஸ்வநாத் காங்கிரசை விட்டு விலகி வேறு கட்சியில் இணைவது என்பது இப்போதைக்கு நடக்காது என நினைக்கிறேன். பா.ஜனதா கட்சியை பொறுத்தவரை எங்களுக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை.
வருகிற 18–ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெறுவோம். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி மலரும். இதேப்போல் பாராளுமன்ற தேர்தலிலும் கர்நாடகத்தில் உள்ள 25 இடங்களிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.