ஓடைப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் குழாயில் தண்ணீர் திருட்டு போலீஸ் நிலையத்தில் புகார்


ஓடைப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் குழாயில் தண்ணீர் திருட்டு போலீஸ் நிலையத்தில் புகார்
x
தினத்தந்தி 14 May 2017 3:30 AM IST (Updated: 14 May 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஓடைப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் திருடப்படுவதாக போலீஸ் நிலையத்தில், அதிகாரி புகார் செய்தார்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு ஓடைப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு, குடிநீர் எடுக்கப்படுகிறது.

அங்கிருந்து அப்பிபட்டி வழியாக ஓடைப்பட்டி வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஓடைப்பட்டி பேரூராட்சி பகுதியான வெள்ளையம்மாள்புரம், சுங்காங்கல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் தண்ணீர் தொட்டிகளில் நீரேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

திருட்டு

இதுதவிர ஆழ்துளை கிணறு அமைத்தும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்வதில் கடந்த சில நாட்களாக குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி செயல்அலுவலர் பசீர்அகமது தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது அப்பிபட்டி பகுதியில் குழாயில் இருந்து திருட்டுத்தமான குடிநீர் எடுக்கப்படுவதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் செயல்அலுவலர் பசீர்அகமது புகார் செய்தார். அதன்பேரில் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் அய்யம்மாள்ஜோதி, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


Next Story