நாகை அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


நாகை அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 May 2017 12:51 AM IST (Updated: 14 May 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த ஐவநல்லூர் ஊராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஐவநல்லூர், செல்லூர், பரங்கிநல்லூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜீவாராமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் (பொறுப்பு) அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் தட்டுப்பாடு

அப்போது ஐவநல்லூர் ஊராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறான இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். தமிழக அரசு 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி, வேலையை உடனே தொடங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கான கூலியை உடனே வழங்க வேண்டும். முதியோர் உதவி தொகை கேட்டு மனு செய்தவர்களுக்கு தகுதியானவர்களுக்கு உடனே உதவி தொகை வழங்க வேண்டும். செல்லூரில் இருந்து நாகை செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு உடனே தீர்வு காணப்படும். டாஸ்மாக் கடையை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறி 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மற்ற கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story