முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பி.யூ.கல்லூரி மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்


முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பி.யூ.கல்லூரி மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்
x
தினத்தந்தி 14 May 2017 2:15 AM IST (Updated: 14 May 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும், எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் ரெயில் முன் பாய்ந்து பி.யூ.கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

மண்டியா,

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றும், எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் ரெயில் முன் பாய்ந்து பி.யூ.கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:–

பி.யூ.கல்லூரி மாணவி

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டனா தாலுகா கனசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரா. விவசாயி. இவருடைய மனைவி ஹேமாவதி. இவர்களது மகள் நிகிதா (வயது 18). பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு படித்து முடித்து இருந்தார். இந்த தேர்வில் மாவட்ட அளவில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று நிகிதா, தனது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் கூறி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 11–ந்தேதி பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், நிகிதா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என தெரிகிறது. மேலும் அவர் கணிதத்தில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தார்.

தற்கொலை

இதனால் நிகிதா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி மாலை மண்டியா மாவட்டம் மத்தூருக்கு வந்த அவர், ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு பெண் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் மத்தூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் நிகிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மண்டியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து போலீசார், நிகிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு நிகிதாவின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மத்தூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story