ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற எம்.எல்.ஏ.விடம் பெண்கள் கோரிக்கை
ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் உள்ள குளம் தூர்வாரும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.வை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:–
ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் சென்னிமலை ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பார் வசதி கிடையாது. அதனால் குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கிக்கொண்டு நேராக அருகில் உள்ள தோட்டங்களுக்கு செல்கிறார்கள். அப்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட திண்பண்டங்களையும் அவர்கள் தங்களது கைகளில் எடுத்துச்செல்கிறார்கள்.
அகற்ற வேண்டும்அதைத்தொடர்ந்து அவர்கள் சாவகாசமாக அங்கு அமர்ந்து மது அருந்துகிறார்கள். மதுபோதை தலைக்கேறியதும் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு, பிளாஸ்டிக் பொருட்களையும் தோட்டங்களிலேயே வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் மழை காலங்களில் தோட்டங்களில் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு உடைந்த மது பாட்டில்களும், பிளாஸ்டிக் பொருட்களும் குவிந்து கிடக்கின்றன.
மேலும் குடிமகன்களால் டாஸ்மாக் கடை அருகில் உள்ள கோவில்களுக்கு சாமி கும்பிட வரும் பெண்களும், பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற வரும் பொதுமக்களும் அச்சப்படுகிறார்கள். எனவே ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.