மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்படும்
மாணவ–மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள செல்லப்பாளையத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 143 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 662 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
‘ஸ்மார்ட் கார்டு’பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மாநில அளவில் முதல் இடம், 2–ம் இடம், 3–ம் இடம் என்ற ‘ரேங்க்’ பட்டியல் முறையை மாற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவ–மாணவிகளுக்கு பிளஸ்–2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டது.
வருகிற கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் மாணவ–மாணவிகளின் அனைத்து விவரங்களும் இடம்பெறும்.
புதிய பாடத்திட்டம்கல்வியில் புதிய புரட்சியாக தமிழில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பிளஸ்–1 வகுப்பு தேர்வை பொதுத்தேர்வாக நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக மாணவ–மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த புதிய பாடத்திட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
100 ஆண்டுகள்இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘அரசு பள்ளிக்கூடங்களில் பிளஸ்–2 வகுப்பில் பாடப்பிரிவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு விரைவில் கவிழும் என்றும், இந்த ஆட்சி கலைவதற்கு நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுபோன்று கருத்துகள் கூற ஒவ்வொருவருக்கும் பேராசை உண்டு. ஆனால் சுய விளம்பரத்துக்காக கருத்துகளை கூறுவது ஏற்புடையது அல்ல’ என்றார்.