திருப்பூர் அருகே நாய்கள் துரத்தி கடித்ததில் புள்ளிமான் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையத்தை அடுத்த கோதபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான மான்கள் வசித்து வருகின்றன.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையத்தை அடுத்த கோதபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான மான்கள் வசித்து வருகின்றன. கோடைகாலம் தொடங்கி விட்டதால் அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் மான்கள் குடிநீர் தேடி திருப்பூர் சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கி உள்ளன.
இதையடுத்து அவ்வாறு வரும் மான்கள் வாகனங்களில் அடிபட்டு பலியாகி வருகின்றன. மேலும் தெருநாய்கள் மான்களை தாக்கி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றுகாலை வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ரகுநாதன் என்பவரின் தோட்டத்தில் 4 வயது மதிக்கத்தக்க புள்ளிமானை 5 தெருநாய்கள் சேர்ந்து கடித்து குதறி கொண்டிருந்தன. இதையடுத்து தெருநாய்களை விரட்டிய அவர் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த மானை மீட்டு ரகுநாதன் முதலுதவி சிகிச்சை செய்தார்.
பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரி சிவமணி மானை மீட்டு மங்கலத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கு மானின் வாய்பகுதி மற்றும் கால்களில் இருந்த காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.