தாராபுரத்தில் லாரியை திருடி விற்க முயன்ற 6 பேர் கைது
தாராபுரத்தில் லாரியை திருடிச்சென்று விற்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாராபுரம்
தாராபுரம் காந்திநகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 49) கட்டிட ஒப்பந்ததாரர். இவரிடம் 4 டிப்பர் லாரிகள் உள்ளது. இரவில் அனைத்து லாரிகளையும், கொளிஞ்சிவாடி பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் நிறுவனம் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். கடந்த 11–ந்தேதி வழக்கம்போல் இரவு டிப்பர் லாரிகளை நிறுத்தி விட்டு, அதன் டிரைவர்கள் வீட்டிற்குச்சென்று விட்டனர். நேற்றுமுன்தினம் காலை வந்து பார்த்தபோது, அதில் ஒரு லாரியை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் காணாமல் போன லாரியை பல இடங்களுக்கு சென்று தேடிப்பார்த்துள்ளார். லாரி எங்குமே கிடைக்காததால் நேற்றுகாலை தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன லாரியை தேடிவந்தனர்.
மீட்புஇந்த நிலையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் பொன்னாவாடி பகுதியில் நல்லதங்காள் தடுப்பணை அருகே லாரியை தேடிச்சென்றுள்ளனர். அப்போது அங்கே மறைவான ஒரு இடத்தில் ரவிச்சந்திரனின் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. லாரியை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள் அதை விற்பனை செய்ய வியாபாரியை எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து, அவர்களிடமிருந்த லாரியை மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
லாரியை திருடிச்சென்றது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தாளக்கரையை சேர்ந்தவர் மகேந்திரன் (25), அதே ஊரைச்சேர்ந்தவர் நவீன் என்ற நவநீதகிருஷ்ணன் (23), வீராட்சிமங்கலம் அருகே உள்ள அணைக்காடு பகுதியைச்சேர்ந்தவர் விக்னேஷ் (24), ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அபிராமிபுரத்தைச்சேர்ந்தவர் நல்லூர்சேவகன் (36), திருவாரூர் மாவட்டம் நன்னிலை சிவன்கோவில்தெருவைச் சேர்ந்தவர் பாலமுரளி (28), விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச்சேர்ந்தவர் சந்தானம் (33) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 6 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.
6 பேர் கைதுஇதில் நல்லூர்சேவகன் மற்றும் பாலமுரளி ஆகிய இருவர் மீதும் வழிப்பறி சம்பந்தமான வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நண்பர்கள் 6 பேரும் தாராபுரத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர். அப்போது லாரியை திருடிச்சென்று விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான புதிய டிப்பர் லாரியை 6 பேரும் சேர்ந்து திருடியுள்ளனர். லாரியை தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் ஓட்டிச்சென்றபோது விடிந்துவிட்டது.
மேற்கொண்டு லாரியை ஓட்டிச் சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து, லாரியை அருகே இருந்த நல்லதங்காள் அணைப்பகுதிக்கு ஓட்டிச்சென்றுள்ளனர். பிறகு அங்கிருந்த மறைவான இடத்தில் லாரியை நிறுத்தி வைத்துவிட்டு, விருதுநகரில் உள்ள ஒரு வியாபாரியை தொடர்பு கொண்டு, லாரியை ரூ.5 லட்சத்திற்கு விற்க காத்திருந்தனர். அப்போது போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் திருடிச்சென்ற லாரியின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.