குற்றவாளிகளை ஒடுக்குவது குறித்து தமிழகம் – புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
குற்றவாளிகளை ஒடுக்குவது குறித்து தமிழகம்–புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த சில நாட்களாக படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. புதுவையை சேர்ந்தவர்கள் தமிழக பகுதிகளில் கொலை செய்யப்படுவதும், புதுவையில் கொலை செய்துவிட்டு தமிழக பகுதிகளில் உடலை வீசி செல்வது, புதைப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த சம்பவங்கள் புதுவை மற்றும் அருகிலுள்ள தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு சவால் மட்டுமல்லாது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. புதுவையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தமிழக பகுதிகளுக்குள் சென்று பதுங்கிக் கொள்வதும், அங்கு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் புதுவைக்கு வந்து தங்குவதும் வாடிக்கையாக உள்ளது.
ஆலோசனைஇந்த நிலையில் தமிழக–புதுச்சேரி போலீசார் இணைந்து குற்றசெயல்களை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் புதுவை செண்பகா ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு புதுவை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் தலைமை தாங்கினார்.
புதுவை போலீஸ் ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜீவ்ரஞ்சன், ஏ.கே.கவாஸ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இருமாநில போலீசாரும் குற்றவாளிகள் குறித்த விவரங்களை பரிமாறிக்கொள்வது, குற்றவாளிகளை பிடிக்க ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது, இருதரப்பினரும் இணைந்து குற்றவாளிகளை ஒடுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டம் முடிந்ததும் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் நிருபர்களிடம் கூறியதாவது:–
தகவல் பரிமாற்றம்காவல்துறையினர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டே பணியாற்ற முடியும். ஆனால் குற்றவாளிகளுக்கு எல்லை என்று எதுவும் கிடையாது. அவர்கள் குற்றங்களை செய்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் சென்று பதுங்கிக்கொள்கின்றனர்.
திருட்டு, வழிப்பறி, கொலை போன்ற சம்பவங்களில் இருமாநில போலீசாரும் தகவல்களை பரிமாறிக்கொள்ள ஆலோசனை நடத்தி உள்ளோம். ஏற்கனவே தமிழக போலீசார் அத்தனை நிலையிலும் எங்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்த கூட்டம் மூலம் பெருமளவு குற்றவாளிகளையும், குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்த முடியும். தொடர்ந்து இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் கூறினார்.