அ.தி.மு.க. (அம்மா) அணியில் எந்தவித பிரச்சினையும் இல்லை
அ.தி.மு.க. (அம்மா) அணியில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு, கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். உதயகுமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், உழவர் பாதுகாப்புத்திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தையல் எந்திரம், திருமண நிதி உதவி, கல்வி உதவித்தொகை உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 901 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ரூ.45 கோடிமுதல்– அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், காசநோய், புற்றுநோயாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் 49 ஆயிரத்து 835 பயனாளிகளுக்கு ரூ.44 கோடியே 88 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தீண்டாமையை கடைபிடிக்காத கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கொடைக்கானல் தாலுகா பெரியூர் ஊராட்சியின் அடிப்படை வசதி மேம்பாட்டிற்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதேபோல விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பசு மாடுகள் வழங்கப்பட்டன.
இதில், பழனி சப்– கலெக்டர் வினீத், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை நடந்தால் மகிழ்ச்சிவிழா முடிந்து வெளியே வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், முதல்– அமைச்சரின் கட்டுப்பாட்டில் அமைச்சர்கள் இல்லை என்று நத்தம் விசுவநாதன் கூறியது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை நாங்களும், அமைச்சர்களின் கருத்துகளை முதல்– அமைச்சரும் கேட்டு சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம். அ.தி.மு.க. (அம்மா) அணியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்தால் மகிழ்ச்சி என்றார்.