தவறான பரிசோதனை அறிக்கை அளித்ததாக புகார்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முற்றுகை போராட்டம்


தவறான பரிசோதனை அறிக்கை அளித்ததாக புகார்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 14 May 2017 4:00 AM IST (Updated: 14 May 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தவறான பரிசோதனை அறிக்கை அளிக்கப்பட்டதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ஆவிளிப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு (வயது 34). இவருடைய மனைவி தீபா (29). இவர் சாணார்பட்டி ஒன்றிய மாதர் சங்க தலைவராக உள்ளார். இவருக்கு கடந்த சில வாரங்களாக மூட்டு வலி இருந்து வந்தது. இதனால் அவர் சிகிச்சைக்காக கடந்த 11–ந்தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

அவருக்கு சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை எடுக்க டாக்டர்கள் எழுதி கொடுத்தனர். இதில் அங்கு சிறுநீர் பரிசோதனை மட்டும் செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு பரிசோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. அதனை பார்த்த தீபா அதிர்ச்சி அடைந்தார். அதில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டதற்கான விவரங்கள் இருந்தன. பரிசோதனை செய்வதற்கு ரத்தமே கொடுக்காத நிலையில் ரத்த பரிசோதனை அறிக்கை அளிக்கப்பட்டது.

மருத்துவமனை முற்றுகை

இதுகுறித்து அவர் டாக்டர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பாக தனது கணவர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் தெரிவித்தார். இந்த நிலையில், தவறான பரிசோதனை அறிக்கை அளிக்கப்பட்டதை கண்டித்து நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர்.

பின்னர் மாவட்ட செயலாளர் பாலசந்திரபோஸ் தலைமையில் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

அதில், அரசு மருத்துவமனையில் இதுபோல தவறான பரிசோதனை அறிக்கை அளித்தால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story