கோவையில் போலீஸ் போல நடித்து பொட்டலத்துக்குள் கல்லை வைத்து ஏமாற்றி பெண்ணிடம் நகை கொள்ளை


கோவையில் போலீஸ் போல நடித்து பொட்டலத்துக்குள் கல்லை வைத்து ஏமாற்றி பெண்ணிடம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 14 May 2017 3:00 AM IST (Updated: 14 May 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தொடரும் சம்பவம் போலீஸ் போல நடித்து பெண்ணிடம் 3 பவுன் நகை கொள்ளை பொட்டலத்துக்குள் கல்லை வைத்து ஏமாற்றினார்கள்

போத்தனூர்,

கோவையில் போலீஸ் போல நடித்து பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையை அபேஸ் செய்து விட்டு அதற்கு பதில் பொட்டலத்துக்குள் கல்லை வைத்து ஏமாற்றிய மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

போலீஸ் என்று கூறி...

கோவை போத்தனூர் ஓ.கே.எஸ். காலனியை சேர்ந்தவர் செல்லதுரை. அவரது மனைவி சசிகலா (வயது 52). இவர் நேற்றுமுன்தினம் மதியம் ஒரு மணியளவில் போத்தனூர் கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 3 பேர் நின்றிருந்தனர். அவர்கள் தங்களை போலீஸ் என்று கூறிக் கொண்டனர். 3 பேரும் காக்கி பேண்ட் அணிந்திருந்தனர். ஆனால் கலர் சட்டை அணிந்திருந்தனர். அவர்கள் 3 பேரும் தாங்கள் குற்றப்பிரிவு போலீசார் என்றும் கொள்ளையர்கள், ஜேப்படி ஆசாமிகள் நடமாட்டம் இருக்கிறதா? என்று கண்காணித்து வருகிறோம்.

இந்த பகுதியில் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் இப்படி தங்க நகை அணிந்து சென்றால் அவர்கள் பறித்துச் சென்று விடுவார்கள். எனவே தங்க சங்கிலியை கழற்றி பொட்டலமாக மடித்து கொண்டு செல்லுங்கள். வீட்டுக்கு சென்று அணிந்துகொள்ளுங்கள் என்று 3 பேரும் கூறினார்கள்.

பொட்டலமாக மடித்து கொடுத்தனர்

இதை உண்மை என்று நம்பிய சசிகலா தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அந்த ஆசாமிகள் அதை வாங்கி ஒரு காகிதத்தில் பொட்டலமாக மடித்து மீண்டும் சசிகலாவிடமே கொடுத்தனர். சசிகலா வீட்டுக்கு சென்ற பின்னர் தங்க சங்கிலியை போட்டுக் கொள்வதற்காக பொட்டலத்தை பிரித்து பார்த்தார். அதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சிறிய கற்கள் இருந்தன. அப்போது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. நகையை வாங்கி பொட்டலமாக மடித்துக் கொடுத்த 3 பேரும் தாங்கள் போலீஸ் என்று கூறி ஏமாற்றியது குறித்து சசிகலா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் போல நடித்து பெண்ணை ஏமாற்றிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சம்பவம் நடந்த இடம் கடைவீதி என்பதால் அந்த பகுதியில் உள்ள ஏதாவது கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்றும், அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியிருக்கிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் வயதான பெண்களை குறிவைத்து போலீஸ் போல நடித்து நகையை வாங்கி பொட்டலமாக மடித்துக் கொடுத்து ஏமாற்றும் சம்பவங்கள் இதற்கு முன்பு பல முறை நடந்துள்ளது. ஆனால் அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசாமிகள் ஒருவரை கூட போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.இதனால் போலீசார் அவர்களை மாறுவேடத்தில் கண்காணித்து அவர்களைகைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story