சிந்தலவாடியில் மணல் குவாரியை மூடக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
சிந்தலவாடியில் செயல்படும் மணல் குவாரியை மூடக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாலாப்பேட்டை,
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையை அடுத்த சிந்தலவாடியில் உள்ள காவிரி ஆற்றில் கடந்த 11–ந் தேதி மணல் குவாரி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சிந்தலவாடி மணல் குவாரிக்கு சென்று குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:–
சிந்தலவாடி காவிரி ஆற்றில் உள்ள மணல்களை அள்ளுவதால் லாலாப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மணல் குவாரியை மூட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேச்சுவார்த்தைஇது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், குளித்தலை உதவி செயற்பொறியாளர் கொழிஞ்சன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்காலிகமாக மணல் குவாரியை நிறுத்துவதாகவும்,
மனு ஒன்று எழுதி கொடுக்கச்சொல்லியும் அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மணல் குவாரியை அகற்றக்கோரி மனு ஒன்று எழுதி கொடுத்தனர். இதையடுத்து மணல் குவாரியில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.