அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் கூறினார்.
புதுக்கோட்டை,
பொது சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து சுகாதார திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட நலச்சங்கம், குடும்ப நல அறுவை சிகிச்சை தர நிர்ணயம், தனியார் மருத்துவமனைகள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்திட அங்கீகாரம் வழங்குதல், அரசு அலுவலர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், நோயாளர் நலச்சங்கம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ரத்த வங்கி செயல்பாடு, காசநோய் திட்டம், சித்த மருத்துவம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உள்பட பல்வேறு சுகாதார திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளின் சிகிச்சை விவரம், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் எண்ணிக்கை, குழந்தை பிறப்பு விகிதம், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட விவரம், அறுவை சிகிச்சை விவரம், மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் செலவின விவரம், குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட எண்ணிக்கை மற்றும் பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கிய விவரம், காசநோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் வழங்கப்படும் சிகிச்சைகள், எச்.ஐ.வி பாதித்தோரின் எண்ணிக்கை, தொடர் கூட்டு மருந்து சிகிச்சைகள் மற்றும் நம்பிக்கை மையத்தில் வழங்கப்படும் ஆலோசனைகள், கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
தரமான சிகிச்சை
தொடர்ந்து கூட்டத்தில் கலெக்டர் கணேஷ் பேசும்போது, நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை முறையாக மேற்கொள்ள வேண்டும். முதல்–அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். மருத்துவமனைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குடும்ப கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவ அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் இணை இயக்குனர் (பொது சுகாதாரம் மற்றும் ஊரகநலப்பணிகள்) சுரேஷ்குமார், துணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.