வெளிநாடுகளில் இறந்த 2 பேரின் உடல்கள் விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது
வெளிநாடுகளில் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
திருச்சி
வெளிநாடுகளில் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 2 பேரின் உடல்களையும், அவர்களுடைய உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் செந்தில் கோபாலகிருஷ்ணன்(வயது 45). இவர் கத்தார் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 11–ந் தேதி செந்தில் கோபாலகிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் நாகை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவருடைய உடல் கத்தாரில் இருந்து விமானம் மூலம் இலங்கை தலைநகர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் திருச்சிக்கு விமானநிலையத்துக்கு நேற்று காலை அவருடைய உடல் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து விமானநிலைய அதிகாரிகள் செந்தில் கோபாலகிருஷ்ணனின் உடலை, அவருடைய உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். செந்தில் கோபாலகிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி நாட்டில் இருந்துசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆ.தெக்கூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 35). இவர் அபுதாபி நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கியிருந்த அறையில் உடல்நிலை சரியில்லாமல் சுப்பிரமணியன் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சுப்பிரமணியனின் உறவினர்கள், அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். இதையடுத்து தமிழக அரசின் நடவடிக்கையின் மூலம் அபுதாபியில் இறந்த சுப்பிரமணியன் உடல் விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து கோபாலகிருஷ்ணனின் உடல் வந்த அதே விமானத்தில் திருச்சி விமானநிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட சுப்பிரமணியனின் உடலை, அவருடைய உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சுப்பிரமணியனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். சுப்பிரமணியனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் இறந்த 2 பேரின் உடல்கள் நேற்று காலை ஒரே விமானத்தில் திருச்சி விமானநிலையத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.