காயத்ரியின் கருண


காயத்ரியின் கருண
x
தினத்தந்தி 14 May 2017 1:57 PM IST (Updated: 14 May 2017 1:56 PM IST)
t-max-icont-min-icon

“டேய் ராகவா! ஒரு வாரமா உன் தங்கச்சி காயத்ரி அவ வீட்டுக்கு வரச்சொல்லி போன் செய்துகிட்டே இருக்கா.

அதான் போயிட்டு வரலாம்ன்னு இருக்கேன்” என்று மகனிடம் தகவல் சொன்னாள், கமலம்மாள்.

“அதனால என்னம்மா? தாராளமா போயிட்டு வா. அவளுக்கு கல்யாணம் செய்து கொடுத்து ஒரு மாசம்தான் ஆகுது. அங்கே எல்லோரும் புது மனுசங்களா இருப்பாங்க. அம்மா கூடவே இருந்தா கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்ன்னு அவ மனசுக்கு தோணும். போயிட்டு ரெண்டு நாள் அவக்கூட தங்கிட்டு வாம்மா” என்று கூறிவிட்டு ஆட்டோ அழைத்து வர சென்றான்.

துணிகளை பெட்டியில் அடுக்கிவிட்டு புறப்பட்ட கமலம்மாள் மருமகள் வைஷ்ணவிவை பார்த்தாள். அவள் முகத்தில் மாமியார் இரண்டு நாட்கள் வீட்டில் இருக்க மாட்டார்கள் என்ற சந்தோஷக் களை தெரிந்தது. காரணம், கமலம்மாள் மருமகளை வசைப்பாடுவதையே வழக்கமாக கொண்டவள். வைஷ்ணவி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தாலும் ஏதாவது ஒரு குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். மாமியாரின் நச்சரிப்பு ஆத்திரமூட்டும் விதத்தில் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அனுசரணையாக நடந்து கொள்வாள்.

“நான் ரெண்டு நாள் வீட்டுல இருக்க மாட்டேன். அந்த தைரியத்துல ஆடாதே. அடக்க ஒடுக்கமா இரு” என்று மருமகளை அதட்டலாய் மிரட்டிக்கொண்டிருந்தபோது, வெளியே ஆட்டோ சத்தம் கேட்டது.
வேகவேகமாக வீட்டை விட்டு வெளியேறியவள், ஆட்டோவில் ஏறி மகள் வீட்டில் போய் இறங்கினாள்.

அம்மாவை பார்த்ததும் காயத்ரியின் முகம் மலர்ந்தது.
“வாம்மா!” என்று ஓடோடி வந்து வரவேற்றாள்.

“பெட்டியை கொடுங்க. நான் எடுத்துட்டு வர்றேன்” என்று வாங்கிக்கொண்டாள், காயத்ரியின் நாத்தனார்.

ரெண்டு நாள் மகள் வீட்டில் தங்கினாள். மூன்று வேளையும் ராஜ உபசாரம்தான். காயத்ரியின் மாமியாரும், நாத்தனாரும் கமலம்மாளை அக் கறையோடு கவனித்தார்கள்.

‘உன் அண்ணி தனியா சமையல் பாத்திரங்களை கழுவுகிறா பாரு. நீயும் போய் ஒத்தாசை பண்ணு. அப்பத்தான் அவளுக்கு அலுப்பு தெரியாது. ஆளாளுக்கு வேலையை பிரிச்சு செய்யுங்க. இல்லேன்னா சேர்ந்து செய்யுங்க’ என்று மகளை விரட்டினாள், காயத்ரியின் மாமியார்.

அதை பார்த்ததும் கமலம்மாளின் உச்சி குளிர்ந்தது. ‘நல்ல இடத்தில் மகளை கட்டிக்கொடுத்திருக் கிறோம்’ என்ற பூரிப்பு முகத்தில் தெரிந்தது.
இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு புறப்பட்டாள். ‘நானும் தெருமுனை வரை வருகிறேன்’ என்று காயத்ரியும் கூடவே வந்தாள்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு காயத்ரி. நல்ல மனுஷங்களா இருக்காங்க. உன்னை நல்ல விதமா நடத்துறாங்க. அதை பார்க்கிறதுக்கே பெருமையா இருக்கு” என்றாள் கமலம்மாள்.

“அம்மா உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும். ரெண்டு நாள் உன்னை வந்து தங்கிட்டு போன்னு சொன்னதுக்கு முக்கிய காரணமே, ‘வீட்டுக்கு புதுசா வரும் மருமகளை எப்படி நடத்தணும்ங்கிறது என் மாமியாரை பார்த்து நீ தெரிஞ்சுக்கணும்ன்னுதான். எனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி, நம்ம வீட்டுக்கு அண்ணியா வந்தவங்களை எப்படி நடத்தணும்னு எனக்கு நீ கத்துக்கொடுக்கலை. புகுந்த வீட்டுக்கு போகிற பொண்ணை அந்த வீட்டுல பிறந்த பொண்ணு எப்படி நடத்தணும்ங்கிறது இங்கு வந்துதான் நான் கத்துக்கிட்டேன். அதேபோல வீட்டுக்கு வந்த மருமகளை எப்படி

நடத்தணும்ன்னு நீ தெரிஞ்சுக்கணும்னுதான் நான் உன்னை என் வீட்டில் தங்க வெச்சேன். உன் பொண்ணு நல்லபடியா வாழனும்ன்னு நீ எப்படி ஆசைப்படுறியோ அதேமாதிரிதான் அண்ணியோட அம்மாவும் நினைப்பாங்க. தன் பொண்ணு கொடுத்து வெச்சவன்னு நீ நினைக்கிற மாதிரி அண்ணியோட அம்மா எப்பம்மா நினைக்கப் போறாங்க? அவங்களுக்கு அந்த நிம்மதியை எப்ப தரப்போறே?” என்று கேட்டுவிட்டு கமலம்மாளின் முகத்தை பார்த்தாள், காயத்ரி.
குற்ற உணர்வை வெளிப்படுத்தமுடியாமல் தலை குனிந்து நின்றாள், கமலம்மாள்.

அப்போது அவளுடைய செல்போன் ஒலித்தது. அதை எடுத்து பேசினாள். மறுமுனையில் மருமகள் வைஷ்ணவி, “அத்தே எப்போ வீட்டுக்கு வருவீங்க? நீங்க இல்லாதது வீடே வெறிச்சோடி கிடக்கு. நான் எது பண்ணினாலும் நீங்க ஏதாவது சொல்லிட்டு இருப்பீங்க. இப்ப எனக்கு வேலையை ஓடமாட்டேங்குது. சோம்பேறித்தனமா இருக்கு. சீக்கிரமா வீட்டுக்கு வாங்க” என்றாள்.
“இதோ வந்துட்டே இருக்கேன்மா” என்ற கமலம்மாவின் குரல் முதன் முதலாக கனிவாக ஒலித்தது.

Next Story