ஆத்தூர் அருகே வழிமாறி வந்தபோது விபத்து: சொகுசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; மூதாட்டி பரிதாப சாவு


ஆத்தூர் அருகே வழிமாறி வந்தபோது விபத்து: சொகுசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; மூதாட்டி பரிதாப சாவு
x
தினத்தந்தி 15 May 2017 4:30 AM IST (Updated: 15 May 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே சொகுசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் வந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார். வங்கி மேலாளர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

ஆத்தூர்,
 
சென்னை மயிலாப்பூர் கே.வி.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் (வயது 55). இவர் சென்னை கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி பானுமதி (50). வெங்கடசுப்பிரமணியன் நெல்லையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது மனைவி பானுமதி, மாமனார் வெங்கட்ராமன் (74), மாமியார் லட்சுமி (70) ஆகியோருடன் ஒரு காரில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டார். காரை ஜீவகன் (32) என்பவர் ஓட்டினார்.

இவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி வழியாக நெல்லைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வழியில், உளுந்தூர்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வழிமாறி சேலம் வழியாக நெல்லைக்கு செல்ல திட்டமிட்டு கார் வந்து கொண்டு இருந்தது.

சாவு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடிபாளையம் புறவழிச்சாலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு வந்தபோது, சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் கார் உருக்குலைந்தது.

இந்த விபத்தில் காரில் வந்த லட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த வெங்கடசுப்பிரமணியன், வெங்கட்ராமன், பானுமதி, ஜீவகன் ஆகியோர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சொகுசு பஸ் டிரைவர் ஆயில்பட்டியை சேர்ந்த தெய்வதுரையை (27) கைது செய்தனர்.
 

Next Story