செண்பகத்தோப்பு அணையை சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்


செண்பகத்தோப்பு அணையை சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 15 May 2017 12:54 AM IST (Updated: 15 May 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

செண்பகத்தோப்பு அணையை சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் கமண்டல நதியின் குறுக்கே ரூ.44 கோடி மதிப்பில் செண்பகத்தோப்பு அணை கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அணையின் தடுப்புச் சுவரில் கசிவுகள் மற்றும் மதகுகள் சேதம் அடைந்து காணப்பட்டது.

எனவே, செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைப்பு செய்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் இதுதொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் செண்பகத்தோப்பு அணையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, எம்.எல்.ஏ.க்கள் வி.பன்னீர்செல்வம், தூசி மோகன், உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அணை கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் ஏன் விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினார்.

ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி செண்பகத்தோப்பு அணை மறுசீரமைப்பு செய்திடவும், தண்ணீர் தேக்கி வைத்து பாசன வசதி செய்திடவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற உள்ளது.

இதற்காக அணையை சீரமைக்கும் பணிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஏற்கனவே இந்த அணை கட்டும்போது ஒப்பந்ததாரர் செய்த தவறுகள் குறித்து உரிய விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது போளூர் தாசில்தார் புவனேஸ்வரி, போளூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் துரை, வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story