திருப்பூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி


திருப்பூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 15 May 2017 4:30 AM IST (Updated: 15 May 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி, பஸ் நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்த அவலம்

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பஸ் நிலையங்களில் பயணிகள் பல மணிநேரம் காத்திருந்தனர்.

திடீர் வேலைநிறுத்தம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை தோல்வியில் முடிந்தது.

இதை கேள்விப்பட்டதும் திருப்பூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று மாலை முதல் அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படவில்லை. குறிப்பாக டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டு அந்தந்த போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டன. வெளியூர் பணிமனைகளில் இருந்து வந்த பஸ்கள் மட்டுமே அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றன.

டவுன் பஸ்கள் சேவை முடக்கம்

திருப்பூரில் 2 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளும், தாராபுரம், காங்கேயம், பல்லடம், உடுமலை ஆகிய இடங்களில் தலா ஒரு பணிமனை என மாவட்டத்தில் மொத்தம் 6 பணிமனைகள் உள்ளன. இதில் டவுன் பஸ்கள் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் என மொத்தம் 570 பஸ்கள் உள்ளன. அதிகாரிகள், கண்டக்டர்கள், டிரைவர்கள், பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 555 பேர் உள்ளனர்.

நேற்று மாலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி விட்டதால், டவுன் பஸ் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்களை அந்தந்த பணிமனைகளுக்கு கொண்டு சென்று டிரைவர், கண்டக்டர்கள் நிறுத்தி விட்டு சென்றனர். இதன்காரணமாக டவுன் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருப்பூர் மாநகர பஸ் நிலையங்களில் தொழிலாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் பஸ்கள் பெரும்பாலானவை இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

40 சதவீத பஸ்கள்

திருப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த வெளியூர் பஸ்களில் முன்புற கண்ணாடியில் ‘அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கும், அண்ணா தொழிற்சங்க பேரவை’ என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தன. பெரும்பாலான பஸ்களின் முன்புற கண்ணாடியில் ‘15-ந் தேதி முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் ஓடாது, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு’ என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தன. இதைப்பார்த்த பயணிகள் குழப்பம் அடைந்தனர். திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 பணிமனைகளிலும் 40 சதவீத பஸ்கள் நேற்று மாலை முதல் இயக்கப்படவில்லை. இருப்பினும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தனியார் பஸ்களில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறிச்சென்றதை காண முடிந்தது.

பணிமனைக்கு...

வெளிமாவட்டங்களில் உள்ள பணிமனைகளை சேர்ந்த அரசு பஸ்கள் நேற்று திருப்பூர் வந்தன. அந்த பஸ்கள் மட்டுமே நேற்று இரவு வரை அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றன. திருப்பூரில் உள்ள பணிமனைகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், பஸ் நிலையங்களில் பல மணி நேரம் காத்திருந்தனர்.

திருப்பூரில், காங்கேயம் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை-1 மற்றும் 2 உள்ளன. இதில் 1-வது பணிமனையில் 110 பஸ்களும், 2-வது பணிமனையில் 70 பஸ்களும் உள்ளன. இந்த 2 பணிமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். நேற்று மாலை திடீரென பஸ்களை இயக்காமல் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பயணிகளை இறக்கி விட்டு பஸ்களை பணிமனைக்கு கொண்டு சென்றனர்.

ரெயில் நிலையத்தில் கூட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முக்கியமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், பணிமனைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தனியார் பஸ்களும், ஒரு சில அரசு பஸ்களும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மற்றும் பெருமாள் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிலையங்களில் ஏராளமானவர்கள் பஸ்சுக்காக காத்து நின்றனர். அந்த வழியாக வந்த தனியார் மற்றும் அரசு பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு பயணிகள் ஏறிச்சென்றனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் இருந்து வெளியூருக்கு செல்வதற்காக குடும்பத்தோடு வந்தவர்கள் பஸ் கிடைக்காமல் பஸ் நிலையத்தில் காத்திருந்து பின்னர் வீடு திரும்பினார்கள். ஒரு கட்டத்தில் பஸ் வராததால் பெரும்பாலான வெளியூர் பயணிகள் ரெயிலில் ஏறி சொந்த ஊர் சென்றனர். இதன்காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) வேலைநிறுத்தம் முழுஅளவில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இதனால் தனியார் டிரைவர், கண்டக்டர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

கடும் பாதிப்பு

தேனியை சேர்ந்த வாசுதேவன்:-

வேலை காரணமாக திருப்பூர் வந்து விட்டு தேனிக்கு செல்வதற்காக திருப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தேன். ஆனால் 1 மணி நேரத்துக்கு மேலாகியும் தேனிக்கு செல்லும் பஸ் வரவில்லை. நாளை (இன்று) வேலைநிறுத்தம் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர். ஆனால் இன்று (நேற்று) திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் என்னைப்போன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக அரசின் கவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட செய்வதற்கான ஏற்பாட்டை செய்து இருக்க வேண்டும்.

திண்டுக்கல்லை சேர்ந்த வாணிஸ்ரீ:-

திருப்பூரில் உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு எனது குழந்தைகளுடன் திண்டுக்கல் செல்வதற்காக திருப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தேன். நீண்டநேரம் காத்திருந்து விட்டேன். இந்த போராட்டத்தால் வெளியூர் செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிரட்டியதால் வேலை நிறுத்தம்

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருப்பூர் மண்டல செயலாளர் துரைசாமி கூறும்போது, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததால், தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களில் முக்கியமான நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், பணி மனையில் சில தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் வேலையை விட்டு நீக்கிவிடுவோம் என மிரட்டுகின்றனர். இதைக்கண்டித்து தான் போராட்டத்தை உடனே தொடங்கினோம் என்றார்.

வேலைக்கு தயாராக வந்த டிரைவர்-கண்டக்டர்கள்

காங்கேயம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்றே அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் சிலர் வேலைக்கு வரவில்லை. இதனால் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இன்று(திங்கட்கிழமை) தொழிலாளர்கள் வேலைக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், இங்குள்ள 88 அரசு பஸ்களை இயக்க தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியார் பஸ் மற்றும் பள்ளி வாகனங்களின் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் காங்கேயம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்துக்கு நேற்று வரவழைக்கப்பட்டு போக்குவரத்து பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காங்கேயம் தாசில்தார் வேங்கடலட்சுமி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை தேர்வு செய்தனர். இதனால், காங்கேயம் அரசு போக்குவரத்து பணிமனையில் தனியார் பஸ், பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் நேற்று குவிந்தனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை மேலாளர் குணசேகரனிடம் கேட்டபோது, ‘தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். பெரும்பாலான பஸ்கள் பணிமனைகளுக்கு வந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தனியார் பஸ் டிரைவர்கள் மூலம் நாளை (இன்று) பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார். 

Next Story