கிருஷ்ணகிரி, ஓசூரில் சூறைக்காற்றுடன் மழை


கிருஷ்ணகிரி, ஓசூரில் சூறைக்காற்றுடன் மழை
x
தினத்தந்தி 15 May 2017 1:03 AM IST (Updated: 15 May 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, ஓசூரில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதியம் 1 மணியளவில் 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து மதியம் 2 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியது.

பின்னர் மழை பெய்யத் தொடங்கியது. பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் பறந்தன. மேலும் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டனா பகுதியில் இருந்த போக்குவரத்து சிக்னல் சரிந்து சாலையில் விழுந்தது. அந்த நேரம் சாலையோரம் பூக்கள் விற்கும் வியாபாரிகள் மழைக்காக ஒதுங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர். இந்த மழையினால் நேற்று கிருஷ்ணகிரியில் குளிர்ந்த சீதோஷ்ணநிலை காணப்பட்டது.

மரம் சாய்ந்தது

இதே போல ஓசூரிலும் நேற்று மாலை சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்தது. சூறைக்காற்று பலமாக வீசியதால், ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி. பகுதியில் விநாயகர் கோவில் எதிரே இருந்த மரம் ஒன்று சாய்ந்து கோவிலின் சுவர் மீது விழுந்தது.

மேலும் மரத்தின் கிளைகள் கோபுரத்தின் மீது விழுந்ததால் அதன் மேல்பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்போது பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story