121-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி மும்முரம்


121-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 15 May 2017 3:45 AM IST (Updated: 15 May 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி

மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சிறந்த கோடை வாச சுற்றுலா இடமாக திகழ்ந்து வருகிறது. ஊட்டியில் வருடந்தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121-வது மலர் கண்காட்சி வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அவைகள் தற்போது பூத்துக்குலுங்குவதால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி மும்முரம்

இந்த நிலையில் தாவரவியல் பூங்காவில் உள்ள அலங்கார மலர் தொட்டிகள் பூங்காவில் அடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத் தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பர் புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், ஜினியா, ஸ்டாக் உள்ளிட்ட 200 ரகங்களை சேர்ந்த சுமார் 3 லட்சம் மலர் நாற்றுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டன. மேலும், சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக 15 ஆயிரம் தொட்டிகளில் பல வண்ணங்களில் பூக்க கூடிய மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டன.

இந்த மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுறும். அதன் பிறகு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்படும். மேலும், இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடையும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் 6 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மணி, துணை இயக்குனர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story