பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோவை, ஊட்டியில் பஸ்கள் ‘திடீர்’ நிறுத்தம்


பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோவை, ஊட்டியில் பஸ்கள் ‘திடீர்’ நிறுத்தம்
x
தினத்தந்தி 15 May 2017 4:30 AM IST (Updated: 15 May 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோவையில் நேற்று மாலை பஸ்கள் திடீரென்று நிறுத்தப்பட்டன. இதனால் ஒரு நாள் முன்னதாகவே பஸ்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.

கோவை

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்து. இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் ஆங்காங்கே பஸ்களை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விட்டு அந்தந்த டெப்போக்களுக்கு பஸ்களை கொண்டு வந்தனர்.

கோவை மாவட்டத்தில் 17 அரசு டெப்போக்கள் உள்ளன. இவற்றிலிருந்து ஆயிரத்து 148 டவுன் பஸ் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என்று தெரியவந்ததும் கோவையில் பஸ்கள் திடீரென்று நிறுத்தப்பட்டது.

உக்கடம், சுங்கம், ஒண்டிப்புதூர், அவினாசி மேம்பாலம் அருகில் உள்ள டெப்போ மற்றும் புறநகரில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி உள்பட பெரும்பாலான டெப்போக்களுக்கு பஸ்களை டிரைவர்கள் ஓட்டி வந்தனர். இதனால் நேற்று மாலை 4 மணி முதல் பஸ்கள் படிப்படியாக அந்தந்த டெப்போக்களுக்கு வந்தன.

50 சதவீத பஸ்கள் ஓடும்

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவையில் இன்று (திங்கட்கிழமை) அரசு டவுன் மற்றும் வெளியூர் பஸ்கள் வழக்கம் போல ஓடும். கோவை மாவட்டத்தில் உள்ள டெப்போக்களில் 8 ஆயிரம் டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்களில் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பஸ்களை இயக்குவார்கள். ஆனால் எதிர்க்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் 50 சதவீத பஸ்கள் ஓடும் என்று தெரிகிறது. பஸ்கள் இன்று வழக்கம் போல ஓடும் என்ற நோட்டீசுகள் சில பஸ்களில் ஒட்டப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் வீண் பதற்றம் அடைய வேண்டாம்

இவ்வாறு அவர் கூறினார்.

முன்கூட்டியே வேலை நிறுத்தம் தொடங்கியது

எதிர்க்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வேலைநிறுத்தம் நடப்பதாக இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் முறிவு என்று நேற்று மாலை தெரியவந்ததும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே பஸ்கள் நிறுத்தப்பட்டன’ என்றனர்.

அரசு பஸ்கள் நேற்று மாலையே வேலைநிறுத்தத்தை தொடங்கியதால் விடுமுறை தினத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள். ஆனால் தனியார் பஸ்கள் இன்று(திங்கட்கிழமை) வழக்கம் போல ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

கோவையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவை மாநகர பகுதியில் உள்ள அனைத்து பஸ் நிலை யங்கள், பஸ் டெப்போக்கள் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்காக 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

புறநகர் பகுதியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பஸ்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, கோவை ரெயில் நிலையத்தில் நேற்று இரவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று மதியத்திற்கு மேல் பெரும்பாலான போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் அரசு பஸ்களை ஊழியர்கள் பணிமனைகளில் நிறுத்திவிட்டு சென்று விட்டனர்.அரசு பஸ்கள் இயக்கப்படாததால் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் கிராம பகுதிகளுக்கு போதிய அளவு அரசு பஸ்கள் இயக்கப்படாத நிலை காணப்பட்டது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. 

Next Story