முதுமலையில் யானை சவாரி மீண்டும் தொடங்கியது, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


முதுமலையில் யானை சவாரி மீண்டும் தொடங்கியது, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 15 May 2017 3:45 AM IST (Updated: 15 May 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யானை சவாரி நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மசினகுடி

சிறந்த சுற்றுலா தலமாகவும், வன விலங்குகளின் வாழ்விடமாகவும் விளங்கி வரும் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சுற்றுலா பயணிகளை முதுமலை அதிகளவில் கவர்ந்து உள்ளதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

முதுமலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் வாகன சவாரி மற்றும் யானை சவாரி மூலமாக அழைத்து சென்று வனப்பகுதியையும், வன விலங்குகளையும் சுற்றி காண்பித்து வருகின்றனர். வாகன சவாரி காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறுகிறது. அதேபோல் யானை சவாரியும் காலை, மாலை நேரங்களில் இயக்கப்படுகிறது.

தெப்பக்காடு முகாம் மூடப்பட்டது

முதுமலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து பிடித்து வரப்பட்டு தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த நர்மதா (வயது 25), பாரதி (9) ஆகிய 2 யானைகள் கடந்த டிசம்பர் மாதம் அடுத்தடுத்து இறந்தன. ஒரே மாதத்தில் 2 யானைகள் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை தற்காலிகமாக மூடினர். மேலும் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த மற்ற யானைகள் பேம்பெக்ஸ் மற்றும் ஈட்டிமரா முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 4 மாதங்களாக யானை சவாரி ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வழக்கம் போல் வாகன சவாரி நடத்தப்பட்டது.

யானை சவாரி மீண்டும் தொடங்கியது

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக மாறி உள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், யானை சவாரிக்கு பயன்படுத்தப்படும் வில்சன், சுமங்கலா, உதயன் ஆகிய 3 கும்கி யானைகள் நேற்று முதல் யானை சவாரிக்கு பயன்படுத்தப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யானை சவாரி மீண்டும் தொடங்கியதால் முதுமலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. 

Next Story