தீக்காயங்களை குணப்படுத்தும் ஸ்டெம் செல் துப்பாக்கி!


தீக்காயங்களை குணப்படுத்தும் ஸ்டெம் செல் துப்பாக்கி!
x
தினத்தந்தி 15 May 2017 3:15 PM IST (Updated: 15 May 2017 3:14 PM IST)
t-max-icont-min-icon

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தீக்காயங்களை குணப்படுத்த சாணம் அல்லது தேனீ மெழுகு போன்றவை பயன்படுத்தப்பட்டது.

ண்ணீர் கலந்த பாலில் உள்ள தண்ணீரை நீக்கிவிட்டு பாலை மட்டும் அருந்தும் திறன்கொண்டது அன்னப்பறவை. அதுபோல தொழில்நுட்பங்களில் உள்ள தீமைகளை நீக்கிவிட்டு அவற்றை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்துவோர் பலர் உண்டு. உதாரணமாக, துப்பாக்கி என்றாலே கொலை செய்வதற்கு என்றுதான் இதுவரை பலரும் நினைத்திருப்போம். ஆனால் ஒரு அதி நவீன துப்பாக்கியை வைத்து மோசமான தீக்காயங்களை குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் ஸ்டெம் செல்களை சேகரித்து, பின்னர் அவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஸ்டெம் செல் கலவை திரவம் ஒன்றை தீக்காயங்கள் மீது தெளிக்கும் திறன்கொண்டது ‘ஸ்டெம் செல் துப்பாக்கி’ அல்லது ‘தோல் துப்பாக்கி’. இதன்மூலம் இரண்டாம் நிலை தீக்காயங்களை வடுக்கள் இல்லாமல் குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளது அமெரிக்காவிலுள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோயர்க் கெர்லாஷ் அவர்களின் ஆய்வுக்குழு.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தீக்காயங்களை குணப்படுத்த சாணம் அல்லது தேனீ மெழுகு போன்றவை பயன்படுத்தப்பட்டது. ஆனால் மருத்துவ தொழில்நுட்பங்கள் முன்னேறிய பின்பு புதிய சிகிச்சைகள் உருவாக்கப்பட்டன.

மிகவும் மோசமான இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை தீக்காயங்களுக்கு நோயாளியின் உடலில் உள்ள ஆரோக்கியமான தோலை வெட்டி எடுத்து தீக்காயங்களின் வைத்து ஓட்டும் ‘ஸ்கின் கிராப்ட்’ (skin graft) முறை சமீப காலம் வரை பின்பற்றப்பட்டு வருகிறது. இம்முறையில், அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்படும் நோயாளியின் தோல் மற்றும் திசுவானது ஒரு சல்லடை போன்ற அமைப்பு கொண்ட சிறு துண்டுகளாக மாற்றப்படும். பின்னர் தீக்காயத்தால் சிதைவுற்ற பகுதியின் மீது அது ஒட்டப்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சிக்கல்கள் பல நிறைந்த இச்சிகிச்சையானது நோயாளிக்கு அதீத வலி மற்றும் மருத்துவச் செலவை ஏற்படுத்துவதோடு, காயம் குணமடைய மிகவும் நீண்ட காலம் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், திசு ஒவ்வாமை அல்லது சில சமயங்களில் இறப்பைக் கூட ஏற்படுத்திவிடும் ‘செப்டிக் ஷாக்’ (septic shock) எனப்படும் ‘நச்சூட்டு அதிர்ச்சி’யை உண்டாக்கும் கிருமித்தொற்று ஆகியவை தோல் ஓட்டும் சிகிச்சையின் ஆபத்துகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, நோயாளியின் தீக்காயங்கள் மீது நோயாளியினுடைய ஸ்டெம் செல்களையே தெளிக்கும் ஸ்டெம் செல் துப்பாக்கி சிகிச்சை முறையானது 100 சதவீதம் அதிக ஆற்றல் வாய்ந்தது என்பதோடு, நோயாளி குணமடையும் கால அளவும் இச்சிகிச்சையில் மிக மிகக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 ஆண்டு வெறும் ஸ்டெம் செல் சிகிச்சையாக கண்டறியப்பட்டு சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக மேம்படுத்தப்பட்டு வரும் இந்த சிகிச்சையானது தற்போது தீக்காயம் உள்ள பகுதியில் ஸ்டெம் செல்களை துப்பாக்கி மூலம் தெளிக்கும் புது வடிவம் பெற்றிருக்கிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு தேனீர் கோப்பையை தன் மார்பின் மீது சாய்ந்துவிட்டதன் காரணமாக மார்புப் பகுதி மொத்தமும் வெந்து பாதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த செட் மெர்ரிக் (Zed Merrick) எனும் இரண்டு வயது சிறுவனுக்கு இந்த நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, தீக்காயம் ஏற்பட்ட அடையாளமே இல்லாத, மிகவும் இயற்கையான மார்புத் தோலினை திரும்பப் பெற்றுவிட்டான் சிறுவன்.

Next Story